கனடாவின் எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் என்பது என்ன? கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்காக சில அடிப்படை தகவல்கள்
வெளிப்படையாகக் கூறினால், எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் என்பது, கனேடிய அரசு, கனடாவின் தொழிலாளர் காலியிடங்களை சில பொருளாதார புலம்பெயர்தல் திட்டங்களின் மூலம் நிரப்புவதற்காக, கனேடிய நிரந்தர வாழிட விண்ணப்பங்களை நிர்வகிப்பதற்காக பயன்படுத்தும் ஒரு அமைப்பாகும்.
எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் என்பது, மூன்று கனேடிய புலம்பெயர்தல் திட்டங்களுக்கான விண்ணப்ப மேலாண்மை அமைப்பாகும். அவையாவன: கனேடிய அனுபவ வகுப்பு, பெடரல் திறன்மிகு பணியாளர்கள் திட்டம் மற்றும் பெடரல் திறன்மிகு வர்த்தக திட்டம்.
எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டமானது, விண்ணப்பதாரர்களின் சுயவிவரங்களை (profiles) தரவரிசைப்படுத்தும், Comprehensive Ranking System (CRS) என்னும் புள்ளிகள் அடிப்படையிலான ஒரு திட்டத்தைப் பயன்படுத்துகிறது. அதிக புள்ளிகள் பெறுவோர், விண்ணப்பிப்பதற்கான அழைப்பு ஒன்றைப் பெறுவார்கள் (ITA). அதைத் தொடர்ந்து அவர்கள் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்.
அடுத்ததாக, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் அலுவலர் ஒருவர் அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து முடிவெடுப்பார். அதைத் தொடர்ந்து, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கைரேகை முதலான விடயங்களைப் பதிவு செய்ய கேட்டுக்கொள்வதுடன், நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யலாம், அல்லது, மேலதிக ஆவணங்களைக் கேட்கலாம்.
உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதென்றால், கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, அதை உறுதி செய்யும் விதத்தில் Confirmation of Permanent Residence (COPR) என்னும் ஆவணத்தை ஒன்றை உங்களுக்கு வழங்கும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிரந்தர வாழிட உரிம விண்ணப்பதாரர்கள் landing processஐ முடிக்கலாம். நீங்கள் கனடாவுக்கு வெளியில் இருந்தால், கனடாவில் குடியமர்வதற்கான முதல் படிகளைத் துவங்குவதற்காக, நுழைவுக்கு முந்தைய சேவைகளை ( pre-arrival services) துவக்கலாம்.
யார் இந்த ITA அழைப்புக்கு தகுதியுடையவர்?
உதாரணத்திற்கு இப்படி வைத்துக்கொள்வோம்...
ஆரவ், 34 வயதான, இளங்கலை பட்டம் பெற்ற, ஆறு ஆண்டுகளாக சமூக சேவகராக பணியாற்றும் ஒருவர்.
அவர், IELTS தேர்வெழுதி, listeningஇல் 7.5 புள்ளிகளும், பிற திறன்களில் 6.5 புள்ளிகளும் பெற்றுள்ளார். ஆரவ் இதற்கு முன் கனடாவில் வேலை செய்ததும் இல்லை, அவர் கனடாவில் படிக்கவும் இல்லை. அவர் 333 புள்ளிகளுடன் எக்ஸ்பிரஸ் நுழைவுக் கூட்டத்தில் (Express Entry pool) நுழைந்துள்ளார். பிறகு அவருக்கு மாகாண நாமினி திட்டத்திற்காக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அவரது விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மாகாண நாமினேஷனும் சேர்ந்து அவரது CRS புள்ளிகள், 933 ஆக உயர்ந்தது. அந்த புள்ளிகள், புதிய எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தின் கீழ், விண்ணப்பிப்பதற்கான அழைப்பைப் பெற போதுமானதாகும். இப்படிப்பட்ட நிலையில், ஆரவ் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்.