வாடகைத் தாய்மை என்றால் என்ன? இந்திய சட்டம் சொல்வது என்ன?
தமிழ்ச்சூழலில் கொண்டாடப்படும் ஜோடியான நடிகர் நயன்தாராவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9/10/22) அன்று surrogacy முறையில் இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கின்றன. கடந்த ஜுன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்ட இருவரும் தற்போது குழந்தை பெற்றிருப்பது சமூகதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.
Surrogacy என்பது என்ன?
வாடகைத் தாய்மையைத்தான் surrogacy எனக் குறிப்பிடுகிறார்கள். அதாவது குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்பும் ஜோடியின் விந்தணுவையும் கருமுட்டையையும் பெற்று வாடகைத்தாயின் கருப்பையில் இடப்பட்டு செயற்கையாக கருவூட்டப்படும். ஜோடியல்லாத ஒரு பெண் பத்து மாதங்களுக்கு குழந்தையை சுமந்து குழந்தை பெற்றெடுத்துக் கொடுப்பார்.
வாடகைத் தாய்மையிலேயே இன்னொரு வகை உண்டு. குழந்தைப் பெற முடியாத தன்மை கொண்டவர்கள் - ஆணெனில் விந்தணுவையும் பெண் எனில் கருமுட்டையையும் - கடனாகப் பெற்று வாடகைத் தாயின் கருப்பையில் இட்டு குழந்தைப் பெற்றுக் கொள்ளும் வகை. பெண்ணுக்குக் குழந்தைப் பெற முடியாத நிலையில் வாடகைத் தாயின் கருமுட்டை பயன்படுத்தப்படும். அவரே குழந்தையின் உயிரியல் தாயாக இருப்பார். ஆண் குழந்தைப் பெற முடியாத நிலையில் விந்தணு கடன் பெற்று மனைவியின் கருமுட்டையுடன் வாடகைத்தாயின் கருப்பையில் இடப்படும். விந்தணு கொடுத்த நபர் குழந்தையின் உயிரியல் தந்தையாகக் கருதப்படுவார்.
விந்தணுவும் கருமுட்டையும் சம்பந்தப்பட்ட ஜோடியிடமிருந்து பெறப்பட்டால், வாடகைத் தாய்க்கும் குழந்தைக்கும் உயிரியல் தொடர்பு இருக்காது.
சட்டம் என்ன சொல்கிறது?
2021ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2022ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதியின் கையெழுத்தோடு சட்டமானது.
Surrogacy (Regulation) Act. வாடகைத்தாய்மை (ஒழுங்குமுறை) சட்டம்!
இச்சட்டத்தின்படி வாடகைத் தாய்மை நடைமுறை பொருளாதாரக் காரணங்களுக்காக செய்யப்படக் கூடாது. உதவும் மனப்பான்மையுடன் மட்டும்தான் வாடகைத் தாய் குழந்தை பெற்றுத் தர வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட ஜோடிக்கு குழந்தைப் பெற முடியவில்லை என்பதற்கான காரணம் மருத்துவரீதியில் சான்று பூர்வமாக குறிப்பிடப்பட வேண்டும். கருக்கலைப்பு செய்வதென்றால், வாடகைத் தாயின் ஒப்புதலின்றி செய்யப்படக் கூடாது. வாடகைத் தாய்மையை நிச்சயமாக பணம் கொடுத்து பெறக் கூடாது.
வாடகைத் தாய்மைப் பெற தகுதி மற்றும் தேவையின் அவசியம் குறித்த சான்றிதழ்களை ஜோடி பெற்றாக வேண்டும். ஜோடிக்கு திருமணமாக ஐந்து வருடங்கள் ஆகியிருக்க வேண்டும். மனைவியின் வயது 25-50 வயதுகளில் இருக்க வேண்டும். கணவனின் வயது 26-55 வயதுகளில் இருக்க வேண்டும். ஜோடிக்கு ஏற்கனவே எந்தக் குழந்தையும் இருக்கக் கூடாது. மாற்றுத் திறன், அகச்சிக்கல், உயிருக்கு சிக்கல் இருக்கும் வகையிலான குழந்தைகள் இருந்தாலும் ஜோடி வாடகைத்தாய்மையை தேர்ந்தெடுக்கலாம்.
வாடகைத் தாயாக இருப்பவர், ஜோடியின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். திருமணமாகியிருக்க வேண்டும். குழந்தை பெற்றிருக்க வேண்டும். 25-35 வயதுகளில் இருக்க வேண்டும். ஒரே ஒருமுறைதான் அதற்கு முன் வாடகைத் தாயாக இருந்திருக்க வேண்டும். மருத்துவரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கான சான்றிதழ்களை அவர் சமர்ப்பிக்க வேண்டும்.
வணிகப்பூர்வமான வாடகைத் தாய்மை கண்டுபிடிக்கப்பட்டாலும் விதிமுறைகள் மீறப்பட்டாலும் 10 வருடங்கள் வரை சிறைக்காவல் தண்டனையும் 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் இச்சட்டத்தின்படி விதிக்க முடியும்.
இது மட்டுமின்றி இன்னொரு சட்டமும் இருக்கிறது.
இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல். Assisted Reproductive Technology Act!
விந்தணு மற்றும் கருமுட்டையை அளித்து கருத்தறிக்கும் முறையிலுள்ள தொழில்நுட்பங்கள் எல்லாவற்றையும் கண்காணிக்கும் சட்டம் இது.
இச்சட்டத்தின்படி இனப்பெருக்க உதவி செய்யும் மருத்துவ மையங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். குழந்தையின் பாலினத்தை மையங்கள் முன்னதாக தீர்மானிக்கக் கூடாது. வாடகைத் தாயிடம் மரபு நோய் இருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
21-55 வயதுகளில் இருக்கும் ஆண்களிடமிருந்து விந்தணுவை வாங்கி இம்மையங்கள் சேமித்து வைக்கலாம். போலவே 23 - 35 வயதுகளிலுள்ள பெண்களின் கருமுட்டைகளைப் பெற்று சேமித்துக் கொள்ளலாம். கருமுட்டை தானமளிக்கும் பெண்களுக்கு திருமணமாகி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு குழந்தையாவது திருமண வாழ்க்கையில் இருத்தல் வேண்டும். வாழ்க்கையில் ஒருமுறை ஏழு கருமுட்டைகள் வரை பெண் தானமளிக்கலாம். மருத்துவ மையம் ஒரு ஆணின் விந்தணுவை ஒரு ஜோடிக்கு மட்டுமே கொடுத்தல் வேண்டும்.
சட்டத்தை மீறுவோருக்கு 5லிருந்து 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனையும் 10-25 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
வாடகைத் தாய்மை முறையின் யதார்த்தமும் பின்னணியும்:
சட்டங்கள் வருவதற்கு முன்பு, வறுமையில் உழன்ற தாய்களுக்கு வாடகைத் தாய்மை பணம் ஈட்டும் மூறையாக மருத்துவத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக பல வெளிநாட்டினர் இந்தியத் தாய்களின் வாடகைத் தாய்மையை பெற்றனர். ஒரு தாயோ பல குழந்தைகள் பெற்றுக் கொடுக்கும் சூழல் நிலவியது. அதற்கென தரகர்களும் இருந்தனர். மறுபக்கத்தில் இப்படி பிறக்கும் குழந்தைகளுக்கான கடவுச்சீட்டு பெறுவதில் சட்டச்சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. உதாரணமாக 2008ம் ஆண்டில் ஒரு ஜப்பானிய ஜோடிக்காக வாடகைத் தாய்மையில் பிறந்த குழந்தைக்கு கடவுச்சீட்டு நிராகரிக்கப்பட்டது. ஏனெனில் சட்டப்படி அக்குழந்தையின் குடியுரிமையை நிர்ணயிப்பதில் சிக்கல் இருந்தது. உச்சநீதிமன்றத்துக்கு வழக்கு வந்து குழந்தைக்கு மனிதாபிமான அடிப்படையில் கடவுச்சீட்டு அளிக்கப்பட்டது.
சட்டங்கள் நடைமுறைக்கு வந்த பிறகு வாடகைத் தாய்மை இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக மேல்தட்டு வர்க்கத்தில். கடந்த 2022ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவும் அவரது கணவரான நிக் ஜோனஸும் வாடகைத் தாய்மை முறையில் குழந்தைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் குழந்தைப் பெற்றுக் கொண்டது தெற்கு கலிஃபோர்னியாவில். நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியும் கூட வெளிநாட்டில் வாடகைத் தாய்மை பெற்று குழந்தை பெற்றிருக்கலாம். குழந்தை பிறந்தது இந்தியாவிலா வெளிநாட்டிலா என்பது குறித்த செய்திகளை அவர்கள் வெளியிடவில்லை. இந்தியாவில் வாடகைத் தாய்மை மருத்துவத்துக்கு 10லிருந்து 20 லட்ச ரூபாய் செலவாகும்.