வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்நாள் எவ்வளவு?
வண்ணத்துப் பூச்சிகள் என்ற இனம் இரவுப்பூச்சி அல்லது பட்டுப்பூச்சி என்ற இனத்திலிருந்துதான் உருவானது. இவை சுமார்,பதினைந்து கோடி வருடங்களுக்கு முன்னால் பூக்கும் தாவரங்கள் உருவான போது உருவானவை. அப்போதுதான் இப்போதுள்ள கண்டங்களும் உருவெடுத்தன. அது கிரடேசியஸ் காலம் எனப்படும் சாக்பீஸ் காலம்.
உலகில் இதுவரை இருப்பதாகக் கூறப்படும் வண்ணத்துப் பூச்சிகளின் இனங்கள் நான்கு கோடியே ஐம்பது லட்சம் வகைகள். அண்டார்டிகா தவிர அனைத்து வெப்ப பகுதிகளிலும் இவை பரவலாக காணப்படுகின்றன.
பொதுவாக, பறந்து செல்லும் இனங்கள் அழிவிலிருந்து தப்பித்து விடுவதால், அவை புதை படிமங்களாகும் வாய்ப்பு குறைவு..
ஆனாலும்கூட, சுமார் 50 வகை வண்ணத்துப் பூச்சியின் புதைபடிமங்கள் கிடைத்துள்ளன.நம்மில் பெரும்பாலோர் வண்ணத்துப் பூச்சியின் வாழ்நாள் மிக குறுகியது என்றே நினைக்கிறோம்.
ஆனால், முதிர்ந்த வண்ணத்துப் பூச்சிகள் ஒரு வாரத்திலிருந்து, ஒரு வருடம் வரை கூட, அவற்றின் இனத்துக்கு தகுந்தாற்போல் வாழ்கின்றன.வண்ணத்துப் பூச்சியின் கம்பளிப் புழு வாழ்நாள் நீண்டதாக இருக்கும்.
இல்லையெனில், கூட்டுப் புழு பருவம் அல்லது முட்டை பருவம் நீண்டதாகவும்/செயலற்றதாகவும், குளிரிலிருந்து தப்பித்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்.
வண்ணத்துப் பூச்சி என்பதற்கு மெல்லிய இறகுகள் என்றுதான் பொருள் இவற்றின் இறகுகளில், ஆயிரக்கணக்கான குட்டி குட்டி நுண்ணிய செதில்கள் வரிசையாக அடுக்கப்பட்டு உள்ளன. வண்ணத்துப் பூச்சியின் சிறகில் உள்ள நிறமும், அடுக்கும், வரிசையும், டிசைனும்,ஒவ்வொரு இனத்துக்கும் தனித் தனியானவையே.
அவைதான் வண்ணத்துப் பூச்சியை வண்ண மிகு அழகு களஞ்சியமாக திகழவைக்கின்றன.