ரஷ்யா உக்ரைனை ஊடுருவியுள்ளது தொடர்பில் நேட்டோ நாடுகளுக்கிடையே மாறுபட்ட கருத்துக்கள்: ஜேர்மனியின் நிலைப்பாடு என்ன?
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புடினை விமர்சித்த விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலைமையில், மற்ற நாடுகள் தங்களுக்கு பைடனுடைய கருத்தில் உடன்பாடு இல்லை என்பதை வெளிப்படுத்தி வருகின்றன.
உக்ரைனை ரஷ்யா ஊடுருவிய விடயம் தொடர்பில் நேட்டோ நாடுகளிடையிலேயே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
முன்னதாக, பிரித்தானியா உக்ரைனுக்கு உதவும்படி கிழக்கத்திய நாடுகளைக் கேட்டுக்கொள்ள, அந்த கருத்தை ஏற்றுக்கொள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மறுத்தார்.
பின்னர், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி புடினை கசாப்புக் கடைக்காரர் என விமர்சித்ததுடன், இந்த ஆள் பதவியில் நீடிக்கக்கூடாது என்றார்.
இந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேக்ரான் பைடனையும் விமர்சித்தார். பைடன் யோசிக்காமல் வார்த்தைகளை விடவேண்டாம் என்று கூறிய மேக்ரான், அதனால் பிரச்சினைகள் பெரிதாகலாம் என எச்சரித்தார்.
இந்நிலையில், ஜேர்மன் சேன்ஸலரான Olaf Scholz தங்கள் தரப்புக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் தலைமையை மாற்றுவது நேட்டோ அமைப்பின் நோக்கம் அல்ல, அப்படி ஒரு நோக்கம் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இல்லை என்றார் Olaf Scholz.
பைடனுடன் இது குறித்து நீண்ட நேரம் பேச தனக்கு வாய்ப்புக் கிடைத்ததாக தெரிவித்துள்ள Scholz, ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் நீதி ஆகியவற்றிற்கு எங்குமே எதிர்காலம் உண்டு, ஆனால், அவை இந்த சுதந்திரத்திற்காக போராடும் மக்களுக்கும் நாடுகளுக்குமானவை என்றார்.