எந்த வகை மாஸ்க் அணிவது பாதுகாப்பானது? Omicron வைரஸ் பரவிவரும் நிலையில் கனேடிய நிபுணர்களின் ஆலோசனை
Omicron வகை மரபணு மாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் பயங்கர வேகத்தில் இனப்பெருக்கம் செய்வதால், அவ்வகை கொரோனா தொற்றியவர்களிடமிருந்து அதிக அளவில் மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், எந்த வகை மாஸ்க், Omicron வகை மரபணு மாற்றம் கொண்ட கொரோனாவிடமிருந்து திருப்திகரமான அளவில் நம்மைப் பாதுகாக்கும் என்ற கேள்வி பலர் மனதிலுமே உள்ளது.
இந்த கேள்விக்கு கனேடிய நிபுணர்கள் சிலர் பதிலளித்துள்ளார்கள்.
ஒன்ராறியோ அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவரான Dr. Peter Juni, ஓரடுக்குள்ள துணி மாஸ்குகள் Omicron வைரஸுக்கு எதிராக பாதுகாக்க போதுமானவையாக இருக்காது என தெரிவித்துள்ளார்.
ஒற்றை அடுக்கு கொண்ட துணி மாஸ்குகளின் வடிகட்டும் திறன் மிகவும் குறைவே என்று கூறியுள்ள அவர், N95 வகை மாஸ்குகள் அதிக பாதுகாப்பு அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
ரொரன்றோ பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் நிபுணராக இருக்கும் Colin Furness கூறும்போது, பொது சுகாதார அதிகாரிகள், கட்டிடங்களுக்குள் N95 வகை மாஸ்குகளை பயன்படுத்துமாறு மக்களை கூடுதல் கண்டிப்புடன் வலியுறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
என்றாலும், உங்களிடம் போதுமான பணம் இருந்து, உங்களால் N95 வகை மாஸ்குகளை வாங்கமுடியும் என்றால், வாங்குங்கள். முடியாது என்றால், மருத்துவ மாஸ்குகள் எனப்படும் மாஸ்குகளை வாங்கி அணிந்துகொள்ளுங்கள். அவை அதிக விலையுடையவையும் அல்ல என்கிறார் அவர்.
அதுவும் உங்களால் முடியவில்லை என்றால், இரண்டு அடுக்குகள் உடைய துணி மாஸ்குகளை அணிந்துகொள்ளுங்கள் என்று கூறும் Colin, ஆனால், அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்து அணியமட்டும் மறக்கவேண்டாம் என்கிறார்.