20 மொழிகளில் மொத்தம் 48,000 பாடல்கள்.., பாடகி எஸ். ஜானகி படைத்த சாதனைகள்
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக நேற்று (ஜூலை 11) காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது, மைசூரு மகாராஜா கல்லூரி திடலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் அஞ்சலி முடிந்த பிறகு, மைசூரு எச்.டி.கோட்டை சாலையில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
மேலும், எஸ். ஜானகிக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் எஸ்.ஜானகி 1938 ஏப்ரல் 23ஆம் தேதி, தற்போதைய ஆந்திரப் பிரதேசம், குண்டூர் மாவட்டம் பள்ளபட்லா கிராமத்தில் பிறந்தார்.

3 வயதில் இசை கற்கத் தொடங்கி, 9 வயதில் மேடையில் பாட ஆரம்பித்த இவர் தமிழில் 1957ஆம் ஆண்டு வெளியான மகதலநாட்டு மேரி திரைப்படம் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.
20 மொழிகளில் சுமார் 48 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். 4 தேசிய விருதுகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாநில விருதுகளை வென்றுள்ளார்.
16 வயதினிலே படத்தின் செந்தூரப் பூவே, தேவர் மகன் படத்தின் இஞ்சி இடுப்பழகி பாடல்களுக்காக தேசிய விருது பெற்றார்.

எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் உள்ளிட்ட நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார்.
குறிப்பாக இளையராஜா இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடிய பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

கே.ஜே. யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட முன்னணி பாடகர்களுடன் ஏராளமான மறக்க முடியாத பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்நிலையில், அவரது மறைவு திரையுலகத்தையும், இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |