மாரடைப்பு(Heart Attack) ஏற்பட்டவுடன் என்ன செய்ய வேண்டும்?
மாரடைப்பு ஏற்பட்டவுடன் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவர் பரூக் அப்துல்லா வெளியிட்டுள்ள பதிவில்,
முதலில் லோடிங் டோஸ் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
ஈசிஜி எடுக்க அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். முடிந்த அளவு நடக்காமல் படுத்துக் கொண்டே இன்னொருவர் அழைத்துச் செல்வது நல்லது. இதயத்துக்கு சிரமத்தைக் குறைக்கும்.
ஈசிஜி - நார்மலாக இருப்பின்
இதயத்தின் தசைகள் காயமுறும் போது வெளிப்படுத்தும் ட்ரோபோனின் நொதியை பரிசோதனை செய்ய வேண்டும்.
காரணம்
ஈசிஜி இல் மாற்றம் தெரியாமல் ஏற்படும் ரத்த நாள அடைப்பும் உள்ளது.
ட்ரோபோனின் அளவுகளும் நார்மல் என்றால்
எக்கோகார்டியோகிராம் எனும் இதயத்தின் தசைகள் எவ்வாறு பணி புரிகின்றன என்பதை ஆராயும் பரிசோதனை செய்யப்பட்டும்.
எக்கோவும் நார்மல் என்றால் கவலைப்பட ஒன்றுமில்லை. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துவிடலாம்
இதுவே ஈசிஜி அசாதாரணமாக இருந்து அல்லது ட்ரோபோனின் அளவுகள் கூடுதலாக இருந்தால்
வந்திருப்பது இதய ரத்த நாள அடைப்பு என்பதை அறிந்து உடனடியாக அடைப்பை ஏற்படுத்தும் ரத்தக் கட்டியை கரைக்கும் சிகிச்சை இருக்கும் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைய வேண்டும்.
ரத்தக் கட்டியைக் கரைக்கும் இந்த சிகிச்சையை THROMBOLYSIS என்கிறோம்
இதை எத்தனை விரைவாக செய்கிறோமோ அத்தனை சதவிகிதம் சிறப்பான சிகிச்சை வெற்றி கிட்டும்
மாரடைப்பு ஏற்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் அதிகபட்சம் மூன்று மணிநேரத்திற்குள் ரத்தக்கட்டியை கரைக்கும் THROMBOLYSIS செய்யப்பட வேண்டும்.
மாரடைப்பு ஏற்பட்ட அனைவருக்கும் ஆஞ்சியோப்ளாஸ்ட்டி உடனே செய்யும் அளவு நம்மிடம் கேத் லேப் வசதி கொண்ட மருத்துவமனைகள் அனைத்து ஊர்களிலும் இல்லை.
ஆயினும் மாரடைப்பு ஏற்பட்ட முதல் மூன்று மணிநேரங்களுக்குள் செய்யப்படும் த்ராம்போலைசிஸ் எனும் ரத்தக்கட்டியை கரைக்கும் சிகிச்சை ஆஞ்சியோப்ளாஸ்ட்டிக்கு ஒப்பானது.
மாரடைப்பு ஏற்பட்டவருக்கு எந்த சிகிச்சையும் அளிக்காமல் ஆஞ்சியோ வசதி கொண்ட பெரிய நகருக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பதை அறிய முடிகிறது.
ரத்தக் கட்டியை கரைக்கும் த்ராம்போலைசிஸ் சிகிச்சை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பன்னோக்கு மருத்துவமனைகளில் உள்ளன. அதை உங்கள் ஊரிலேயே முதலில் செய்து கொள்ளுங்கள்
இவ்வாறு ரத்தக்கட்டியை கரைத்து இதயத்தின் ரத்த ஓட்டத்தை மீட்டெடுத்த பிறகு
பொறுமையாக கேத் லேப் வசதி கொண்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தேவைப்பட்டால் ஆஞ்சியோ செய்யப்பட்டு அடைப்புக்கு ஏற்றவாறு ஸ்டெண்ட் வைத்துக் கொள்ளலாம்.
மாரடைப்பு ஏற்படும் தருணத்தில் நீண்ட தூரத்தில் இருக்கும் மருத்துவமனைகளை ஆஞ்சியோ செய்வதற்கு அடையும் முன்
தாங்கள் வாழும் ஊரில் ரத்தக்கட்டியை கரைக்கும் சிகிச்சை அளிக்கும் அரசு & தனியார் மருத்துவமனைகள் இருப்பின் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆஞ்சியோ வசதி உள்ள கேத் லேப் இருக்கும் மருத்துவக் கல்லூரிகள் & மருத்துவமனைகள் நிறைந்த பேரூர்களில் வசிப்பவர்கள் அந்த வசதிகளை உபயோகப்படுத்தி நேரடியாக ஆஞ்சியோ செய்து கொள்ள வேண்டும்.
தாமதம் உயிரைக் கொல்லும் விரைவில் சிகிச்சை அளிப்பது இதயத்தின் தசைகளை உயிர்ப்பிக்கும்...
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |