முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை என்ன செய்வது?: சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ள யோசனை
முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களிலிருந்து கிடைக்கும் பணத்தை, உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பயன்படுத்தலாம் என சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை தெரிவித்துள்ளார்கள்.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, பல பில்லியன் கணக்கிலான ரஷ்யர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய செல்வந்தர்களுக்குச் சொந்தமான அந்த சொத்துக்களை உக்ரைனுக்கே கையளிக்கலாம் என்றும், அந்த பணம் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனை கட்டியெழுப்ப பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சராசரிக்கும் அதிகமான அளவில் ரஷ்ய செல்வந்தர்கள் வாழும் இடமாக சுவிட்சர்லாந்து உள்ளது என்று கூறியுள்ள சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினரான Mattea Meyer, ஆகவே, இந்தப் பணம் புடினால் அழிக்கப்பட்டு வரும் உக்ரைனுக்கு பலனளிப்பதுதான் சரியானது என்கிறார்.
இதே கருத்தை ஆதரிக்கும் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான Andrea Caroni, சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டுள்ள அராஜகங்களால் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு ரஷ்யாதான் பொறுப்பேற்கவேண்டும் என்கிறார்.
சுவிட்சர்லாந்தில் ரஷ்யர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும் சொத்துகளின் மதிப்பு சுமார் 200 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் ஆகும். அதில், இதுவரை தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்யர்களின் சொத்துக்களின் மதிப்பு மட்டுமே 7.5 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.