புற்றுநோயின் மத்தியில் திருமண வாழ்வு எப்படி இருந்தது? கண்ணீர் விட்டுக் கதறிய இலங்கையரான செய்தியாளர்
தனக்கு புற்றுநோய் தாக்கிய நிலையிலும், அது தனது மனைவியுடனான உறவை நெருக்கமாக்கியதாக கண்ணீரின் மத்தியில் தெரிவித்துள்ளார் இலங்கையில் பிறந்தவரான செய்தி வாசிப்பவர் ஒருவர்.
ஜார்ஜ் அழகையா (66), BBC தொலைக்காட்சியில் செய்தி வழங்குபவர்.
2014ஆம் ஆண்டு, அழகையா குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்குப்பின் குணமடைந்து பணிக்குத் திரும்பிய நிலையில், 2017ஆம் ஆண்டு மீண்டும் புற்றுநோய்க்கு ஆளானார் அவர்.
இரண்டாவது முறையும் புற்றுநோயை வென்று செய்தி வாசிக்க திரும்பிய அழகையாவை, கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் புற்றுநோய் தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார் அவர்.
வெளிப்படையாக கண்ணீர் விட்டு அழுத அழகையா, தனக்கு 2014ஆம் ஆண்டு புற்றுநோய் தாக்கியபிறகு, தங்கள் திருமண வாழ்வு மேலும் நெருக்கமானதாக தெரிவித்தார்.
தனது புற்றுநோய், இறுதியில் தன்னை இவ்வுலக வாழ்விலிருந்து பிரித்துவிடலாம் என்று கூறும் அழகையா, புற்றுநோய் வந்தது தனக்கு வருத்தம்தான் என்றாலும், அது கடந்த ஏழு ஆண்டுகளில் தனக்கு பல அரிய பாடங்களைக் கறுக்கொடுத்துள்ளது என்று கூறுகிறார்.
பல்கலையில் பயிலும்போது, அழகையா Frances என்ற இனிமையான பெண்மணியை சந்தித்தார். திருமணம் செய்துகொண்ட இருவரும் 36 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்துவருகிறார்கள். தம்பதியருக்கு தங்கள் முப்பது வயதுகளிலிருக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
நாம் நேசிக்கும் ஒரு பெண்ணிடம் நாம் இருவரும் கடைசி வரை இணைந்து பயணிக்க முடியாது என்று கூறுவது கடினம் என்றாலும், அந்த காலகட்டம் தங்கள் இருவருக்கும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கிறார் அழகையா.
புற்றுநோய் தாக்கியதால் சீக்கிரம் கோபம் வர வாய்ப்புள்ளது என்றாலும், என்ன நடந்தது என்பது குறித்து யோசித்துக்கொண்டிருக்காமல் அதை எதிர்கொள்ளும் ஒரு ஞானம் தனக்கு வந்திருப்பதாக தெரிவிக்கிறார் அழகையா.
இலங்கையில் பிறந்த அழகையா, ஒரு சிறு பையனாக இருக்கும்போது இங்கிலாந்துக்கு வந்தவர் ஆவார்.
இதற்கிடையில், மீண்டும் புற்றுநோய் பரவத்தொடங்கியதையடுத்து அழகையா செய்தி வாசிப்பதிலிருந்து ஒரு இடைவேளை எடுத்துக்கொள்ள இருப்பதாக அவரது ஏஜண்ட் தெரிவித்துள்ளார்.