ராஜினாமா செய்த பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் அடுத்து என்ன செய்யப்போகிறார்?
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து பிரித்தானிய ஊடகங்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.
ஸ்டார்மர் அடுத்து என்ன செய்யப்போகிறார்?
ஜெரமி கார்பின் என்பவர் லேபர் கட்சியின் தலைவராக இருந்த காலத்தில், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது லேபர் கட்சி.
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கார்பின் லேபர் கட்சியின் தலைமையிலிருந்து விலக, கட்சித் தலைவராக பொறுப்பேற்றார் கெய்ர் ஸ்டார்மர்.

அவரது கொள்கைகளும் அணுகுமுறையும், முந்தைய லேபர் கட்சி தலைவர்களைவிட வித்தியாசமாக இருந்தன.
பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகளான வீடுகள் தட்டுப்பாடு, அரசு மருத்துவமனையிலுள்ள பிரச்சினைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற விடயங்கள் மீது அவர் கவனம் செலுத்த, அடுத்து வந்த தேர்தலில், அதாவது, 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி.
ஆனால், சில தலைகீழ் கொள்கை மாற்றங்கள், தவறான முடிவுகள், கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு முதலான காரணங்களால் ஸ்டார்மர் பதவி விலக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, ஆன்டி பர்னாம் என்பவர் பிரித்தானிய பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.
இந்நிலையில், ராஜினாமா செய்துள்ள ஸ்டார்மர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து பிரித்தானிய ஊடகங்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.
ஸ்டார்மர் ராஜினாமா செய்தபோது, நீங்கள் அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர், நான் சமையல் வகுப்புகளில் சேர்ந்து சமையல் கற்றுக்கொள்ளப்போகிறேன் என வேடிக்கையாக கூற, ஆம், அவருக்கு இரண்டே இரண்டு உணவு வகைகள்தான் சமைக்கத் தெரியும், அதனால், சமையல் வகுப்பில் சேருவது நிச்சயம் அவசியம்தான் என அவரது நண்பர் ஒருவர் விளையாட்டாகக் கூறினார்.
விடயம் என்னவென்றால், சில உலகத் தலைவர்களைப் போல, சொந்த நாட்டுக்குள் அதிக வரவேற்பு இல்லையென்றாலும், மற்ற நாடுகளின் தலைவர்கள் பலர் ஸ்டார்மர் மீது மரியாதை வைத்துள்ளார்கள்.
ஆக, ஸ்டார்மர், சர்வதேச அளவில் பொறுப்பொன்றை ஏற்கக்கூடும் என அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்துள்ளார்கள்.
ஸ்டார்மருக்கும், நேட்டோ அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் பதவி மீது விருப்பம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆக, அந்த பதவிக்கு ஆள் தேவைப்படும் பட்சத்தில், ஸ்டார்மர் அந்த திசையை நோக்கி பயணிக்கலாம்.
ஆனால், இப்போதைக்கு, அடுத்த சில வாரங்கள் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் செலவிட இருக்கிறார் ஸ்டார்மர்.
தனது பதவியை ஸ்டார்மர் ராஜினாமா செய்தபோது, நாட்டிலேயே மிக உயர்ந்த பதவியை விட்டுவிட்டு, மிக முக்கியமான பொறுப்பை ஏற்க இருக்கிறேன், அது என் பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த தந்தையாகவும், என் மனைவிக்கு ஒரு சிறந்த கணவனாகவும் இருக்க முயற்சிப்பதுதான் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |