ஸ்மார்ட் போன்களில் அனுமதியின்றி மைக்ரோபோனை இயக்கும் வாட்ஸ் அப்: இந்திய பொறியாளர் குற்றச்சாட்டு
வாட்ஸ் அப் செயலி தன்னுடைய மொபைல் மைக்ரோபோனை அனுமதி இன்றி இயக்குவதாக பொறியாளர் ஒருவர் குற்றம்சாட்டி இருந்த நிலையில், அதற்கு வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
வாட்ஸ் அப் மீது புகார்
வாட்ஸ் அப் செயலி தன்னுடைய மொபைல் போனில் உள்ள மைக்ரோ போனை அனுமதியின்றி இயக்குவதாகவும், தான் தூங்கும் போது கூட தன்னுடைய போனின் மைக்ரோபோன் செயல்பாட்டில் இருப்பதாகவும் இந்தியாவை சேர்ந்த பொறியாளர் ஒருவர் ட்விட்டர் தளத்தில் குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு பதிலளித்து இருந்த இந்தியாவின் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர், வாட்ஸ் அப் நிறுவனத்தின் அத்துமீறல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத தனியுரிமை மீறல் என்றும், பொறியாளர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.
விளக்கமளித்த வாட்ஸ் அப் நிறுவனம்
மைக்ரோபோன் தொடர்பான புகார் பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பொறியாளரை தொடர்பு கொண்டு வாட்ஸ் நிறுவனம், ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் தான், பொறியாளரின் மொபைல் போனில் உள்ள மைக்ரோபோன் கட்டுப்பாடு இல்லாமல் இயங்குவதற்கு காரணம் என்று விளக்கம் அளித்துள்ளது.
அத்துடன் இது தொடர்பான பிரச்சனையை கூகுள் நிறுவனத்திடம் உடனடியாக சரி செய்யுமாறு வாட்ஸ் அப் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.