இலவச விசா... பிரித்தானியாவுக்கு பணியாளர்கள் தேவை என வாட்ஸ் ஆப்பில் வெளியாகும் செய்திகள்: ஒரு எச்சரிக்கை தகவல்
பிரித்தானியாவில் பணி செய்ய 132,000 பணியாளர்கள் தேவை என்பது போன்ற செய்திகள், மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகமான வாட்ஸ் ஆப்பில் வரத்துவங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், பிரித்தானியாவுக்கு குடிபெயர விருப்பம் தெரிவிப்போருக்கு, இலவச விசா முதல் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் செய்திகள் உலா வருகின்றன.
மேலும், அந்த செய்தி, பிரித்தானிய அரசு, வாட்ஸ் ஆப் வாயிலாக பணியாட்களைத் தேர்வு செய்வதாகவும், உலகம் முழுவதிலுமிருந்து 186,000 பணியாளர்களை பணிக்கமர்த்தத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறது.
இது போதாதென்று, அந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்தால், அது பிரித்தானிய விசா மற்றும் புலம்பெயர்தல் இணையதளத்தைப் போலவே காட்சியளிக்கும் ஒரு இணையதளத்துக்கும் அழைத்துச் செல்கிறது.
ஆனால், இந்த செய்திகள் உண்மையானவை அல்ல. பிரித்தானிய அரசு இலவச விசா கொடுக்கவும் இல்லை, அது வாட்ஸ் ஆப் வாயிலாக பணியாளர்களைத் தேர்வு செய்யவும் இல்லை.
ஆகவே, மக்கள் இந்த போலி செய்திகளை நம்பி மோசடியாளர்களிடம் ஏமாந்துபோகவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.