கவலைப் படாதீங்க.., Whatsapp இன்னும் 3 மாதத்திற்கு ஒன்றும் ஆகாது! புதிய அப்டேட் தள்ளிவைப்பு
மக்களே புதிய விதிமுறைகளை சுயமாக மதிப்பாய்வு செய்து ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு, அப்டேட் திகதியை வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.
புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உலகெங்கிலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, Whatsapp-ன் மீது இந்தியாவில் இப்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாட்ஸ்அப் தனது புதிய தரவு தனியுரிமைக் கொள்கையை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகளை லட்சக்கணக்கான பயணர்கள் ஏற்கவில்லை என்பதற்காக, பிப்ரவரி 8 முதல் யாரும் தனது கணக்கை இழக்க மாட்டார்கள் என்று whatsapp தெரிவித்துள்ளது.
பதிலாக, அதற்கான அவகாசத்தை மே 15-ஆம் திகதி வரை ஒத்திவைத்து, மக்களே சுயமாக விதிமுறைகளை மதிப்பாய்வு செய்து ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக வாட்ஸ்அப் கூறியது.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட வாட்ஸ்அப் நிறுவனம், "எங்கள் சமீபத்திய புதுப்பிப்பைச் சுற்றி எவ்வளவு குழப்பங்கள் உள்ளன என்பதை நாங்கள் பலரிடமிருந்து கொள்கிறோம். ஏராளமான தவறான தகவல்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளன, மேலும் எங்கள் கொள்கைகளையும் உண்மைகளையும் புரிந்துகொள்ள அனைவருக்கும் உதவ விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
மேலும், "உங்கள் பகிரப்பட்ட இருப்பிடத்தை எங்களால் பார்க்க முடியாது, உங்கள் தொடர்புகளை நாங்கள் பேஸ்புக்கில் பகிரவில்லை" என்றும், இந்த புதுப்பிப்புகளுடன், அது எதுவும் மாறவில்லை என்று வாட்ஸ்அப் கூறியது.
மேலும் நாங்கள் தரவை எவ்வாறு சேகரித்து பயன்படுத்துகிறோம் என்பது குறித்து மேலும் வெளிப்படைத்தன்மையை வழங்குவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.