பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது எப்போது?: திகதி வாரியாக பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்
பிரான்சில் பொதுவாக கோவிட் நிலைமை மேம்படத் துவங்கியுள்ள நிலையில், பிப்ரவரி மாதத் துவக்கத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் விதிகள் நெகிழ்த்தப்படும் என்றும், இரண்டு வாரங்களுக்குப் பின் இரவு விடுதிகளைத் திறக்க அனுமதியளிக்கப்படும் என்றும் பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.
நேற்று, பிரான்ஸ் பிரதமர் Jean Castex வெளியிட்ட தகவல்களின்படி, பிப்ரவரி மாதம் 2ஆம் திகதியிலிருந்து விளையாட்டுத் திடல்கள் போன்ற பொழுதுபோக்கு அரங்கங்களில் எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்த கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும், அன்று முதலே, வெளியிடங்களில் மக்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 16 முதல், மீண்டும் திரையரங்குகளில் மக்கள் பாப்கார்ன் முதலான தின்பண்டங்களை உண்ண அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். குளிர்கால விடுமுறைக்குப் பின், பள்ளிகளில் மாணவ மாணவியர் மாஸ்க் அணிதல் கட்டாயம் என்னும் விதி நீக்கப்படலாம்.
அதே நேரத்தில், தடுப்பூசி பாஸ், அதாவது உணவகங்கள், காபி ஷாப்கள், திரையரங்குகள் மற்றும் நீண்ட தூர ரயில்களைப் பயன்படுத்துவதற்கு கொரோனா தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தைக் காட்டவேண்டும் என்னும் கட்டுப்பாடு ஜனவரி 24 முதல், அதாவது வரும் திங்கட்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு கொரோனா அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துவிட்டது என தெரியவரும்பட்சத்தில், பின்னர் தடுப்பூசி சான்றிதழ் கட்டுப்பாடும் விலக்கிக்கொள்ளப்படலாம் என ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் நேற்று பேசிய பிரதமர் Jean Castex தெரிவித்தார்.