கொரோனா தடுப்பூசி போட்ட பின் இந்த அறிகுறி இருந்தால்... உடனே மருத்துவரை அழையுங்கள்! எச்சரிக்கை அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி போட்ட நான்கு நாட்களுக்கு பிறகு தொடர்ந்து தலைவலியோ அல்லது ஊசி போட்ட இடத்தில் சிராய்ப்பு போன்று தொடர்ந்து இருந்தால், உடனடியாக மருத்துவரை அழைக்கும் படி பிரித்தானியா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில், பிரித்தானியா அரசு தீவிரமான முயற்சியில் இறங்கி வருகிறது. இதற்காக தடுப்பூசி போடும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, தடுப்பூசி ஒவ்வொரு கட்டமாக போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒரு சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி போட்டக் கொண்டதன் பக்க விளைவாக சிலர் உயிர் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, தலைமை நிர்வாகி மருத்துவர் ஜூன் ரெய்ன், கொரோனா தடுப்பூசி போட்ட நான்கு நாட்களுக்கு பிறகு, தொடர்ந்து தலைவலியோ அல்லது சிராய்ப்பு போன்று இருந்தால் உடனடியாக மருத்துவரை அழைக்கும் படி கூறியுள்ளார்.
மேலும், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை மக்கள் தொடர்ந்து பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் நன்மைகள் ஆபத்துக்களை விட மிக அதிகம் என்று கூறப்படுவதால், தடுப்பூசி போட்ட நான்கு நாட்களுக்கு பின் தலைவலி அல்லது ஊசி போடப்பட்ட இடத்திற்கு அப்பால் சிராய்ப்பு போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட எவரும் இருந்தால்,மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (எம்.எச்.ஆர்.ஏ) தெரிவித்துள்ளது.
தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்படுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், இந்த அறிகுறிகளை மக்கள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே நாங்கள் கவனித்து வருகிறோம். தடுப்பூசி போட்ட நான்கு நாட்களுக்கு மேல் நீடிக்கும் தலைவலி உள்ள எவருக்கும் நாங்கள் இந்த விஷயத்தை அறிவுறுத்துகிறோம்.
லேசான காய்ச்சலும் கொரோனா தடுப்பூசியின் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்றாக இருப்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். குளிர் மற்றும் காய்ச்சல் போன்றவை பொதுவாக சில மணிநேரங்களுக்குள் தோன்றி ஓரிரு நாட்களுக்குள் தீர்க்கப்படும்.
ஆனால், இதுவே தொடர்ந்து நீடிக்கும். இது மிகவும் அரிதான பக்க விளைவு, இது தொடர்பான எல்லா தரவுகளையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்று ஜூன் ரெய்ன் கூறியுள்ளார்.
