உறைபனியில் உயிரிழந்த குடும்பம்.. இலங்கையிலிருந்து கனடாவுக்கு! விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்கள்
கனேடிய எல்லையில் இந்தியக் குடும்பம் ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, மக்களைக் கடத்தும் கடத்தல்காரர்களின் பலே திட்டங்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள், மக்களை சுற்றுலாவுக்கு அனுப்புவது போல் காட்டுவதற்காக, இந்தியாவிலிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து கனடாவுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
அவ்வகையில், உயிரிழந்த பட்டேல் குடும்பத்தின் சொந்த கிராமமான Dingucha கிராமத்திலிருந்து மேலும் நான்கு குடும்பங்கள் கனடாவுக்குச் சென்றுள்ளன. ஆனால், அவர்கள் இப்போது கனடாவில் இல்லை.
அவர்கள் அனைவரும், வின்னிபெகில் சில மாதங்கள் தங்கியிருந்துள்ளார்கள். அதற்குப் பிறகு அவர்கள் அமெரிக்காவை நோக்கி புறப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை.
பட்டேல் குடும்பம் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள இந்திய அதிகாரிகள், உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் கனடாவுக்கு மக்களை அனுப்புவது தொடர்பான விடயங்களில் மூளையாகச் செயல்பட்டு வந்ததைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அந்த நபர், குஜராத்திலிருந்து புறப்படுபவர்களை சிலரை தாய்லாந்துக்கும், சிலரை இலங்கைக்கும் அனுப்பியுள்ளார். அதாவது அவர்களை சுற்றுலாப்பயணிகள் என்று காட்டுவதற்காக, அவர்கள் 15 நாட்கள் வரை இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். பிறகு இலங்கையிலிருந்து அவர்கள் கனடாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.
அவ்வகையில், அந்த ஏஜண்ட், 10 குடும்பங்களை கனடாவுக்கு அனுப்பியுள்ளதாக கருதப்படுகிறது.
அதற்காக, அவர் பெரியவர்களுக்கு ஆளுக்கு 75 இலட்ச ரூபாயும், சிறுவர்களுக்கு ஆளுக்கு 25 இலட்ச ரூபாயும் பெற்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.