கனடாவுக்கு பணி செய்ய வந்த பணியாளர்கள் எங்கே? கனடா எதிர்கொள்ள இருக்கும் பெரும் பிரச்சினை
கனடா பெரும் பிரச்சினை ஒன்றை சந்திக்க இருக்கிறது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்...
அந்த பிரச்சினை, தொழிலாளர் பற்றாக்குறை!
கனடாவில் 55 வயது மற்றும் அதற்கு அதிக வயதுள்ளோர் தொழிலாளர் சந்தையை விட்டு தொடர்ச்சியாக வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள். கோவிட் காலகட்டத்தில் பலர் முன்கூட்டியே ஓய்வு பெற்றுவிட்டார்கள். அவர்கள் விட்டுச் சென்ற காலியிடங்களை நிரப்ப தகுதியான ஆட்கள் இல்லை.
கனடாவில் கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் தொழிலாளர் தட்டுப்பாடு நிலவுவதாக கனடாவின் புள்ளியியல் துறை தெரிவிக்கிறது.
குறிப்பாக, கட்டுமானம் மற்றும் தயாரிப்பு துறைகளில் பெருமளவில் தொழிலாளர் தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றைத் தொடர்ந்து, ஹொட்டல்கள் மற்றும் மதுபானவிடுதிகள் முதலான உணவகத்துறையிலும் அதிக அளவில் தொழிலாளர் தட்டுப்பாடு நிலவுகிறது.
Alex Lupul/CBC
இப்படி பணியாளர் பற்றாக்குறை நிலவுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக, ஒரு பணியில் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டாலும் அதைப் பொருத்துக்கொண்டே அந்த பணியில் நீடிக்கும் மன நிலைமை இப்போது பணியாளர்களுக்கு இல்லை.
இப்போது பணியாளர்களுக்கு தேர்வு செய்ய பல விடயங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு, விலைவாசி உயர்வு முதலான காரணங்களால் வாடகை கொடுக்க கஷ்டப்படும் ஒரு நிலை உருவானதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்தோர் பலர் மீண்டும் தாங்கள் விட்டுவந்த நாட்டுக்கே அமைதியாக திரும்பி வருவதைக் குறித்த ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
அதேபோல, ஒரு பணியில் போதுமான வருமானம் இல்லை என்றால், இப்போது பணியாளர்கள் வேறு வேலையைத் தேடிச் செல்கிறார்கள். ஒரு இடத்தில் ஊதியம் போதுமானதாக இல்லையென்றால், வேறு இடத்துக்குப் புறப்பட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார்கள் அவர்கள்.
விளைவு?
பணியிடங்களில் பணியாளர் தட்டுப்பாடு!
இதையெல்லாம் கனடா முன்பே யோசிக்கவில்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
ஆக, இந்த பிரச்சினைக்கு தீர்வு?
சிலர் பணியாளர்களுக்கு பதிலாக தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்தலாம் என்கிறார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்துவது சாத்தியமில்லை என்பதை பலரும் அறிந்திருப்பார்கள்.
இன்னொரு தீர்வு, தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களை பணிக்கமர்த்தி தொழிலாளர் தட்டுப்பட்டை சமாளிப்பது.
எல்லாவற்றையும் விட சிறந்தது, ஊதியத்தை உயர்த்தி ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வித ஊதியம், உள்நாட்டவர்களுக்கு ஒருவித ஊதியம், புலம்பெயர்ந்தோருக்கு ஒருவித ஊதியம் என இருப்பதை மாற்றி, அனைவருக்கும் ஒரே விதமான, சீரான ஊதியம் என்ற முறையைக் கொண்டுவந்தால், அது இந்த தொழிலாளர் தட்டுப்பாடு பிரச்சினையை தீர்க்க உதவலாம் என்கிறார் Armine Yalnizyan என்னும் பொருளாதார நிபுணர்.
Christopher Katsarov/The Atkinson Foundation