இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம்.., எது தெரியுமா?
இந்தியா மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகும்.
நாட்டின் நிர்வாக வசதிக்காக இந்தியா மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது மொத்தம் 806 மாவட்டங்கள் உள்ளன.
அந்தவகையில், இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது என்பது குறித்து பார்க்கலாம்.

பரப்பளவின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் (Kutch) மாவட்டமாகும்.
இதன் மொத்த பரப்பளவு 45,674 சதுர கிலோமீட்டர். இந்த மாவட்டத்தில் சுமார் 21 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
மேலும் 10 தாலுகாக்கள் மற்றும் 994 கிராமங்கள் உள்ளன. இங்கு எழுத்தறிவு விகிதம் 70.59% ஆகும்.

கட்ச் மாவட்டம் வடமேற்கில் பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. பரப்பளவில் இது இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை விட பெரியதாகும்.
இந்த மாவட்டத்தில் உலகின் மிகப்பெரிய உப்புப் பாலைவனங்களில் ஒன்றான ரான் ஆஃப் கட்ச் அமைந்துள்ளது.
இதில் கிரேட் ரான் ஆஃப் கட்ச், லிட்டில் ரான் ஆஃப் கட்ச் மற்றும் பன்னி புல்வெளி ஆகிய பகுதிகள் அடங்கும்.

உலகப் புகழ்பெற்ற சிந்து சமவெளி நாகரிகத்தின் தோலாவிரா தொல்லியல் தளம் இந்த மாவட்டத்தில்தான் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடைபெறும் ரான் உத்சவ் திருவிழா ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, உள்ளூர் மக்களுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.
மேலும், கட்ச் பகுதி ஃபிளமிங்கோ பறவைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் வாழ்விடமாகவும், இந்தியக் காட்டுக்கழுதை சரணாலயத்திற்கும் பெயர் பெற்றதாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |