இரண்டு நாட்களில் ஏராளமானோர் பணி இழக்கலாம்: அரசு ஊழியர்களுக்கு திகிலை ஏற்படுத்தியுள்ள வெள்ளை மாளிகை
அமெரிக்க அரசு முடங்கியதைத் தொடர்ந்து, இன்னும் இரண்டே நாட்களில் ஏராளம் ஃபெடரல் பணியாளர்கள் பணி இழக்க நேரிடலாம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
முடங்கிய அமெரிக்க அரசு
அமெரிக்காவின் புதிய நிதியாண்டு, அக்டோபர் மாதம் 1ஆம் திகதி துவங்கும் நிலையில், அரசாங்கம் செயல்படுவதற்குத் தேவையான நிதி மசோதாக்களை காங்கிரஸ் நிறைவேற்றியாகவேண்டும்.
இந்நிலையில், மருத்துவத்துறைக்கான செலவுகள் தொடர்பில் குடியரசுக் கட்சி ஒரு திட்டத்தை முன்வைக்க, அதை ஏற்க மறுத்து ஜனநாயகக் கட்சி மற்றொரு திட்டத்தை முன்வைக்க, இரு கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், எந்த தற்காலிக நிதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.
ஃபெடரல் ஏஜன்சிகள், காங்கிரஸ் ஒப்புக்கொண்ட நிதியைச் சார்ந்தே இயங்குகின்றன. ஆக, நிதி ஒதுக்கப்படவில்லையென்றால் ஏஜன்சிகள் இயங்கமுடியாது, அவை முடக்கப்படும். ஆக, அமெரிக்க அரசு முடங்கியுள்ளது.
இன்னும் இரண்டே நாட்களில்...
இந்நிலையில், ஃபெடரல் ஊழியர்கள் பணி இழக்கும் நிலை இன்னும் இரண்டே நாட்களில் துவங்கலாம் என வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளரான கரோலின் (Karoline Leavitt) தெரிவித்துள்ளார்.
இது குறித்த அறிவிப்பை கரோலின் வெளியிடும்போது அவருடன் அமெரிக்க துணை ஜனாதிபதியான JD வேன்ஸும் இருந்தார். அரசு முடங்கியதற்காக ஜனநாயக கட்சி மீது பழி சுமத்திய அவர், இந்த அரசு முடக்கம் எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது தெரியாது என்று கூறியுள்ளார்.
அரசு முடங்கியதற்கு ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் மாறி மாறி ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், பாதிக்கப்படப்போவது பணியாளர்கள்தான். ஏராளம் பணியாளர்கள் பணி இழக்க இருக்கிறார்கள், பலர் ஊதியம் இல்லா விடுப்பில் அனுப்பப்பட இருக்கிறார்கள், பணியில் இருக்கும் பலருக்கு இப்போதைக்கு ஊதியம் கிடைக்காது என்று தெரிந்தும் வேலை செய்யும் நிலையில் இருக்கிறார்கள்.
விடயம் என்னவென்றால், பிரச்சினைக்குக் காரணமான அரசியல்வாதிகளுக்கு சரியான நேரத்தில் ஊதியம் கிடைத்துவிடும். ஆக, பாதிக்கப்படப்போவது பணியாளர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |