வீடே மணக்கும் கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணி: எப்படி செய்வது?
அன்றாட செய்யும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என செய்யாமல் இந்த வித்யாசமான வெள்ளை மட்டன் பிரியாணி செய்து பாருங்கள்.
பார்ப்பதற்கு வெள்ளையாக இருந்தாலும் இந்த பிரியாணியின் சுவை அனைவரையும் அடிமையாக்கி விடும்.
அட்டகாசமான சுவையில் கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சீரக சம்பா அரிசி- 1kg
- மட்டன்- 1kg
- வெங்காயம்- 200g
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 50g
- புதினா- 1 கைப்பிடி
- கொத்தமல்லி- 1 கைப்பிடி
- பச்சைமிளகாய்- 12
- தேங்காய் பால்- 1 கப்
- பாதம்- 50g
- பிஸ்தா- 25g
- முந்திரி- 25g
- கசகசா- 10g
- பட்டை- 2 துண்டு
- கிராம்பு- 6
- சோம்பு- 2 ஸ்பூன்
- ஏலக்காய்- 3
- எலுமிச்சை- 1/2
- நெய்- 50ml
- தேங்காய் எண்ணெய்- 50ml
- உப்பு- தேவையான அளவு
- உலர் திராட்சை- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் சேர்த்து அதனுடன் தயிர், இரண்டாக வெட்டிய பச்சைமிளகாய் 5, புதினா, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு 1 ஸ்பூன், 1 ஸ்பூன் உப்பு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிணைந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
அடுத்து பாதம், பிஸ்தா, முந்திரி மற்றும் கசகசா இவற்றை சிறிது நேரம் ஊறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதைத்தொடர்ந்து ஒரு குக்கரில் ஊறவைத்த மட்டன் கலவையை சேர்த்து மட்டன் மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் ஊற்றி 4-5 விசில் விட்டு வேகவைக்கவும்.
அதன்பின் குக்கரை திறந்து அதில் அரைத்து வைத்த கலவை, தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
பின் வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதில் வெங்காயம், பச்சைமிளகாய் 7 சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் வேகவைத்த மட்டனை தண்ணீர் இல்லாமல் எடுத்து இதில் சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து இதில் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும். மட்டன் வேகவைத்த தண்ணீரையே 1 கப் அரிசிக்கு 11/2 கப் என்கின்ற அளவிற்கு ஊற்றவும்.
பின் இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் இதில் 1/2 மணி நேரம் ஊறவைத்த அரிசி சேர்த்து 90% வெந்து வந்தவுடன் உலர் திராட்சை சேர்த்து மூடிபோட்டு 20 நிமிடம் தம் போட்டு இறக்கினால் சுடசுட கொங்குநாடு மட்டன் வெள்ளை பிரியாணி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |