16 இளைஞர்களை பலிவாங்கிய சாலை விபத்தை ஏற்படுத்திய இந்தியர்... கனேடிய அமைப்பு அளித்துள்ள அனுமதி
கனடாவில் 16 இளைஞர்களை பலிவாங்கிய சாலை விபத்தை ஏற்படுத்திய இந்திய சாரதிக்கு பகல் நேர ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி, Saskatchewanஇல் Jaskirat Singh Sidhu என்ற இந்தியர் ஓட்டிய ட்ரக், பேருந்து ஒன்றின் மீது மோதியது.
அந்த பேருந்தில் Broncos ஜூனியர் ஹாக்கி அணியைச் சேர்ந்த இளைஞர்கள் பயணித்தனர். அந்த பயங்கர விபத்தில் 16 பேர் கொல்லப்பட்டதுடன், 13 பேர் படுகாயமடைந்தனர்.
ஆகவே, Sidhuவுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தான் பயணிக்கும் சாலைக்கு குறுக்கே மற்றொரு சாலை குறுக்கிடுவதாக அறிவிப்பு பலகைகளும், சிக்னல்களும் இருந்தும், தான் பிரேக் பிடிக்கவில்லை என ஒப்புக்கொண்ட Sidhu, தண்டனையையும் எந்த எதிர்ப்பும் இன்றி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், தற்போது, The Parole Board of Canada அமைப்பு Sidhuவுக்கு ஆறு மாதங்களுக்கு பகல் நேர ஜாமீன் வழங்கியுள்ளது. அதாவது பகலில் வெளியே செல்ல அனுமதிக்கப்படும் Sidhu, இரவில் சிறைக்குத் திரும்பிவிடவேண்டும். அத்துடன், விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி அவர் நடந்துகொண்டால், ஆறு மாதங்களுக்குப் பிறகு அவருக்கு முழுமையான ஜாமீன் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
Ryan Remiorz/The Canadian Press
Sidhu கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர். பெடரல் சட்டத்தின்படி, நிரந்தர வாழிட உரிமம் பெற்ற ஒருவர் குற்றச்செயல் ஒன்றில் ஈடுபட்டு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பெற்றால், தன் தண்டனைக்காலத்திற்குப் பின் அவர் நாடு கடத்தப்படலாம்.
கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி, Sidhu புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் அமைப்பிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது. அந்த அமைப்பு Sidhu இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பில் முடிவெடுக்கும்.
இதற்கிடையில், Sidhuவின் சட்டத்தரணி தனது கட்சிக்காரர் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து பெடரல் நீதிமன்றத்தில் வாதிட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.