சூயிங்கத்தைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்
சூயிங்கத்தை இவர்தான் கண்டுபிடித்தார் என்று எளிதில் சொல்லிவிட முடியாது. சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதிய கற்காலத்திலேயே மனிதர்கள் சூயிங்கம் போன்ற பொருளைப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் ஃபின்லாந்தில் கிடைத்திருக்கிறது. மாயன், அஸ்டெக் இன மக்களும் மரப்பிசினைப் பயன்படுத்தி சூயிங்கம் போன்ற ஒரு பொருளை உருவாக்கி, மென்று இருக்கிறார்கள்.
பற்களைச் சுத்தம் செய்வதற்கும் வாயிலிருந்து துர்நாற்றம் வராமல் இருப்பதற்கும் இந்தச் சூயிங்கத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். கிரேக்கர்களும் மரத்திலிருந்து கிடைக்கும் பிசினைக் கொண்டு, சூயிங்கம் போன்ற பொருளை, பற்களின் நலத்துக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பூர்வகுடி அமெரிக்கர்களிடமிருந்து கற்றுக்கொண்டு, சில விஷயங்களில் மாற்றம் செய்து நவீன சூயிங்கத்தை 1848-ம் ஆண்டு ஜான் பி. கர்டிஸ் உருவாக்கினார். 1850-ம் ஆண்டு பாரஃபின் மெழுகைக் கொண்டு சூயிங்கம் தயாரிக்கப்பட்டு, பிரபலமானது.
நறுமணத்துடன் கூடிய சூயிங்கத்தை, 1860-ம்ஆண்டு ஜான் கோல்கன் முதன் முதலில் உருவாக்கினார். இனிப்புச் சுவையுடைய சூயிங்கத்தைத் தயாரித்து, 1869-ம்ஆண்டு வில்லியம் செம்பிள் முதல் முறை காப்புரிமைப் பெற்றார்.
1884-ம் ஆண்டு ப்ளாக் ஜாக் என்பவர் இனிப்பும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட அதிமதுரத்தை வைத்து சூயிங்கத்தை உருவாக்கினார். 1899-ம்ஆண்டு ரிக்ளே’ஸ் ஸ்பியர்மின்ட் கம் வெகு வேகமாகப் பிரபலமானது. இன்றுவரை பயன்பாட்டில் இருந்துவருகிறது.
1960-ம் ஆண்டு சிந்தடிக் ரப்பரைப் பயன்படுத்தி சூயிங்கம் தயாரிக்கப்பட்டது. இது செலவு குறைவு என்பதால் பலரும் இந்த நுட்பத்தில் சூயிங்கத்தைத் தயாரித்து வருகின்றனர்,