சினிமா முதல் துணை முதல்வர் வரை - யார் இந்த அஜித் பவார்?
விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் குறித்து இந்த பதிவில் காணலாம்.
விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரும், தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் இன்று பாராமதி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள நிகழ்வில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் மும்பையில் இருந்து புறப்பட்டுள்ளார்.
பாராமதி விமான நிலையத்தில் காலை 8;45 மணியளவில் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி, விமானம் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த விபத்தில், அஜித் பவாருடன் பயணித்த அவரது 2 உதவியாளர்கள் மற்றும் 2 விமானிகள் உட்பட பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
பாராமதி விமான ஓடுதளத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்ததால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸைத் தொடர்பு கொண்டு விபத்து குறித்து கேட்டறிந்துள்ளனர்.
Shri Ajit Pawar Ji was a leader of the people, having a strong grassroots level connect. He was widely respected as a hardworking personality at the forefront of serving the people of Maharashtra. His understanding of administrative matters and passion for empowering the poor and… pic.twitter.com/mdgwwGzw4R
— Narendra Modi (@narendramodi) January 28, 2026
அஜித் பவார் மரணத்திற்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த அஜித்பவார்?
77 வயதான அஜித் பவார் மகாராஷ்டிரா முன்னாள் முன்னாள் முதல்வர் சரத் பவாரின் அண்ணன் மகன் ஆவார்.

பள்ளிக்கல்வியை முடித்த இவர் தனது தந்தையின் மரணத்திற்கு பின்னர் கல்வியை தொடரவில்லை. மும்பையில் உள்ள புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளரான வி. சாந்தாராமின் "ராஜ்கமல் ஸ்டுடியோஸ்"சில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது காங்கிரஸில் தனது சித்தப்பா சரத் பவார் வளர்ந்து வரும் தலைவராக உருவெடுத்த போது, 1982 ஆம் ஆண்டு, கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகக் குழு உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் அஜித் பவார்.
1991 ஆம் ஆண்டு பாராமதி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து முதல் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது, பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக சரத் பவார் தேர்வு செய்யப்பட்ட போது, அவர் போட்டியிடுவதற்காக தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பின்னர், சரத் பவாரின் பாராமதி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அஜித் பவார்.
1991 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து 8வது முறையாக பாராமதி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
சுதாகர்ராவ் நாயக், சரத் பவார், சுஷில்குமார் ஷிண்டே, தேஷ்முக், அசோக் சவான் ஆகியோரின் அமைச்சரவைகளில் நீர்ப்பாசன துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்து வந்துள்ளார்.
கட்சியை உடைத்த அஜித் பவார்
1999 ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகிய சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய போது அவருடன் அந்த கட்சியில் இணைந்தார்.

2023 ஆம் ஆண்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய இவர், தனது ஆதரவு எம்எல்களுடன் பாஜக அமைச்சரவையில் இணைந்து துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.
சரத்பவார் தனது மகள் சுப்ரியா சுலேயை முன்னிலைப்படுத்தி அஜித் பவாரை புறக்கணித்ததாக கூறப்பட்டாலும், இந்த பிளவின் பின்னணியில் பாஜக உள்ளதாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதிக எம்எல்களின் ஆதரவு உள்ளதால் அஜித் பவாருக்கு உள்ளதாக கூறிய தேர்தல் ஆணையம், தேசிய வாத காங்கிரஸ் கட்சியை அதிகாரப்பூர்வமாக அஜித் பவாருக்கு வழங்கியது.
முறைகேடு வழக்குகள்
1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை, விதிகளை மீறி 300 கோடிக்கு அஜித் பவாரின் மகன் மகன் பார்த் பவாருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது. ஆனால் காவல்துறை இந்த குற்றச்சாட்டில் பார்த் பவாரின் பெயர் சேர்க்கப்படவில்லை.

அஜித் பவார் நீர்ப்பாசன அமைச்சராக இருந்த போது செயல்படுத்திய திட்டங்களில் ரூ.70,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை மற்றும் லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
அஜித் பவார் பாஜக அமைச்சரவையில் இணைந்த 2 நாட்களில், இந்த முறைகேடுகளில் அஜித் பவாருக்கு தொடர்பில்லை என இது தொடர்பான 9 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டில் வறட்சியின் போது மகாராஷ்டிரா அரசு தண்ணீர் வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்வலர்கள் 55 நாள் உண்ணாவிரதம் இருந்தபோது, தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்ய அணையில் சிறுநீர் கழிக்க வேண்டுமா" என அஜித் பவார் கேட்டதற்கு பெரும் கண்டனம் எழுந்தது. அதனையடுத்து தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.
கட்சி இரண்டாக உடைந்த பின்னர், சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் தனது சித்தப்பா சரத் பவாரின் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். மேலும், நடைபெற உள்ள ஜில்லா பரிஷத் தேர்தலிலும் இரு கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடத் திட்டமிட்டு இருந்தன.

அஜித்பவார் 1985 ஆம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் பதம்சிங் பாட்டீலின் சகோதரி சுனேத்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சுனேத்ரா தற்போது ராஜ்யசபா எம்பி ஆக உள்ளார். இந்த தம்பதிக்கு பார்த் பவார் மற்றும் ஜே பவார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |