பத்மஸ்ரீ விருது பெற்ற இந்தியாவின் முதல் பெண் யானை பாகன் யார் தெரியுமா?
இந்தியாவின் முதல் பெண் யானைப் பாகன் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். அவரை பற்றிய சில தகவல்கள் இந்த செய்தி குறிப்பில்.
பெண் யானைப் பாகன்
அசாமில் உள்ள கௌரிபூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் பர்பதி பருவா. மார்ச் 14, 1953 அன்று பிறந்த இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வாழ்க்கையை யானைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணித்துள்ளார்.
பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த தொழிலில் பெண்களும் வரலாம் என்பதற்கு உதாரணமாக பர்பதி பருவா இருக்கிறார்.
இவருடைய தந்தை பிரகிருதிஷ் சந்திர பருவா, கௌரிபூரின் கடைசி ஆட்சியாளராகவும், யானை நிபுணராகவும் இருந்தார். அவரது அரச தொழுவத்தில் கிட்டத்தட்ட 40 யானைகள் இருந்தன. கௌஹாத்தி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்ற பர்பதி தனது 14 வயதில் அசாமின் கொச்சுகான் காட்டில் முதல் யானையை அடக்கினார்.
இந்த சம்பவம் தான் அவருக்கு யானைப் பாகனாக வேண்டும் என்ற விருப்பத்தைத் தூண்டியது. இதையடுத்து, 1975 முதல் 1978 வரை, மேலா ஷிகார் என்ற பாரம்பரிய அசாமிய நுட்பத்தைப் பயன்படுத்தி 14 காட்டு யானைகளை அடக்கினார்
அதோடு இதுவரை அவர் 500க்கும் மேற்பட்ட யானைகளுக்குப் பயிற்சி அளித்துள்ளார். அசாம், மேற்கு வங்கம், கேரளா, உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களில் வனத்துறைகளுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
யானைப் பாகன்களுக்கு பயிற்சி அளித்தல், மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்க்க உதவுதல் மற்றும் பாரம்பரிய மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தி காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை அளித்தல் ஆகிய செயல்களையும் செய்துள்ளார்.
சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) ஆசிய யானை நிபுணர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
பர்பதி பருவாவின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) உலகளாவிய 500 ரோல் ஆஃப் ஹானர் (1989), அசாமின் கௌரவ தலைமை யானைப் பாதுகாவலர் (2003) மற்றும் அசாமின் மிக உயர்ந்த குடிமகன் விருதான அசோம் கௌரவ் விருதுகள் ஆகியவை வழங்கப்பட்டது.
அதோடு வனவிலங்கு மற்றும் பாதுகாப்பு குழுக்களிடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார், இதில் நேச்சர்ஸ் வாரியர் ஜூரி விருது (2023) அடங்கும். குறிப்பாக 2024 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |