மெட்டாவின் ரூ.8763 கோடி சலுகையை நிராகரித்த பெண் - யார் இந்த மீரா முராட்டி?
AI தயாரிப்புகளை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டி வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், பல நூறு கோடி ஊதியம் கொடுத்து, போட்டி நிறுவன ஊழியர்களை தங்கள் நிறுவனத்தில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகிறது.
மெட்டா நிறுவனம், 100 மில்லியன் டொலர் கொடுத்து தங்கள் ஊழியர்களை அவர்களின் நிறுவனத்திற்கு சேர்க்க முயற்சிப்பதாக Open AI நிறுவனர் சாம் ஆல்ட்மேன் குற்றஞ்சாட்டினார்.
ஏஐ சாட்பாட்களில், Open AI நிறுவனத்தின் ChatGPT வாரத்திற்கு 700 மில்லியன் செயலில் உள்ள பயனர்களுடன், ஆண்டுக்கு 12 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டி, ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஊழியர்களுக்கு வலை வீசும் மெட்டா
இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் சூப்பர் இன்டெலிஜென்ஸ் திட்டத்திற்காக, சான் பிரான்சிஸ்கோவை தளமாக கொண்டு செயல்படும் திங்கிங் மெஷின்ஸ் லேப் (Thinking Machines Lab) நிறுவன ஊழியர்களை மெட்டாவில் இணைக்க முயற்சித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்தில் இணைந்தால், அந்த நிறுவனர் மீரா முராட்டிக்கு 1 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.8,763 கோடி) ஊதியம் தருவதாக அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 200 மில்லியன் முதல் 500 மில்லியன் டொலர் வரை வழங்க முன் வந்துள்ளார்.
ஆனால் மீரா முராட்டி மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள், மெட்டா வழங்க முன்வந்த சலுகையை நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறுகிய கால எதிர்பாராத லாபத்தை விட முராட்டியின் தொலைநோக்குப் பார்வையையும் அதிகம் நம்புகிற காரணத்தால் ஊழியர்கள் இந்த வாய்ப்பை மறுத்ததாக கூறப்படுகிறது.
யார் இந்த மீரா முராட்டி?
36 வயதான மீரா முராட்டி, அல்பேனியாவில் பிறந்தவர் ஆவார். முன்னதாக கோல்ட்மேன் சாக்ஸ், சோடியாக் ஏரோஸ்பேஸ் மற்றும் டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டில், ஓபன்ஏஐ நிறுவனத்தில் இணைந்த இவர், அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இவரது தலைமையின் கீழே, ChatGPT, DALL·E, Codex மற்றும் Sora போன்ற புதுமையான கருவிகளை Open AI அறிமுகப்படுத்தியது.
செப்டம்பர் 2024 இல், Open AI நிறுவனத்தை விட்டு வெளியேறிய அவர், பிப்ரவரி 2025 இல் திங்கிங் மெஷின்ஸ் லேப் என்னும் AI நிறுவனத்தை தொடங்கினார்.
ஸ்டார்ட்அப் நிறுவனராக மட்டுமின்றி, AI ஒழுங்குமுறை கட்டமைப்புகள் குறித்து ஐரோப்பிய ஆணையத்திற்கும் ஆலோசனை வழங்கி வருகிறார்.
மேலும், 2024 ஆம் ஆண்டில், டைமின் 100 மிகவும் செல்வாக்கு மிக்க AI நபர்கள் பட்டியலிலும், 2023 ஆம் ஆண்டின் Fortune இன் 100 மிகவும் சக்திவாய்ந்த வணிக பெண்கள் பட்டியலிலும் இடம்பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |