காசா மருத்துவமனை வெடிவிபத்துக்கு காரணம் யார்? பிரான்ஸ் உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல்
காசா மருத்துவமனை வெடிவிபத்துக்கு யார் காரணம் என்பதைக் கண்டறியுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் உளவுத்துறை சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
காசா மருத்துவமனை மீது தாக்குதல்
காசா பகுதியிலுள்ள, அல்-அஹ்லி அரபி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் நிகழ்ந்த வெடிவிபத்தொன்றில் பலர் கொல்லப்பட்டார்கள்.
முதலில் 500 பேர் வரை கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது 471 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
DAWOOD NEMER/AFP VIA GETTY IMAGES
ஆனால், அமெரிக்க உளவுத்துறையோ, 100 முதல் 300 பேர் வரை பலியாகியிருக்கலாம் என கணக்கிட்டுள்ளது.
தாக்கியது யார்?
தாக்குதலை நிகழ்த்தியது இஸ்ரேல் என பாலஸ்தீனிய அதிகாரிகள் குற்றம் சாட்ட, இஸ்ரேல் தரப்பு அதை மறுத்துள்ளது.
காசா மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் என்னும் அமைப்பு உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சில ட்ரோன் காட்சிகள், சில உரையாடல்கள் ஆகியவற்றை அதற்கு ஆதாரமாக வெளியிட்டுள்ளது இஸ்ரேல்.
Mahmud Hams / AFP
அதன்படி, காசாவிலிருந்து பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் என்னும் அமைப்பு இஸ்ரேல் மீது வீசிய ராக்கெட் ஒன்று தவறுதலாக அந்த மருத்துவமனை மீது விழ, பாலஸ்தீன அதிகாரிகளோ இஸ்ரேல் மீது பழிபோட்டு விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவல்
இந்நிலையில், பிரான்ஸ் ராணுவ உளவுத்துறையும், பாலஸ்தீன ராக்கெட் ஒன்று தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்ததுதான் வெடிவிபத்துக்குக் காரணம் என்று கூறியுள்ளது.
5 கிலோகிராம் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட பாலஸ்தீன ராக்கெட் ஒன்று, தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்திருக்கத்தான் வாய்ப்புள்ளது என்றும், தான் கண்டுபிடித்துள்ள விடயங்கள் எதுவுமே, இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை சுட்டிக்காட்டவில்லை என்றும் பிரான்ஸ் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
Mahmud Hams/Agence France-Presse—Getty Images
வெடிவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடத்தைப் பார்க்கும்போது, அது பாலஸ்தீன ராக்கெட் ஒன்று வெடித்ததால் ஏற்பட்ட பாதிப்பு என்பது தெளிவாக தெரிவதாகவும், அது இஸ்ரேல் ராக்கெட்டாக இருந்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ரகசிய தகவல்கள், சேட்டிலைட் புகைப்படங்கள், மற்ற நாடுகளின் உளவுத்துறை தகவல்கள் முதலிய பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் உளவுத்துறை இந்த முடிவை கணித்துள்ளதாக பிரான்ஸ் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |