17 பிள்ளைகளை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்ட நபர்: யார் இந்த ரோஹித்?
இந்தியாவின் மும்பை நகரத்தில், நபர் ஒருவர் 17 பிள்ளைகளை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பிணைக்கைதிகளாக 17 பிள்ளைகள்
நேற்று வியாழக்கிழமை மதியம் 1.45 மணியளவில், மும்பையிலுள்ள Powai என்னுமிடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 17 பிள்ளைகளை ஒரு நபர் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளதாக தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பு உருவானது.

பிள்ளைகளை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்திருந்த நபர், ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், மஹாராஷ்டா மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சரான தீபக் கேசர்க்கர் உட்பட சிலருடன் பேசவேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், தனது கோரிக்கையை ஏற்காவிட்டால், எல்லாவற்றையும் தீவைத்துக் கொளுத்திவிடுவதாகவும் மிரட்டியிருந்தார்.
தீயணைப்புத்துறையினர் உதவியுடன் பிள்ளைகள் இருந்த கட்டிடத்துக்குள் அதிரடியாக நுழைந்த பொலிசார் பிள்ளைகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
பிள்ளைளைப் பிடித்துவைத்திருந்த நபருடைய பெயர் ரோஹித் ஆர்யா என்றும், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளியாகின.
ஆனால், அவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த ரோஹித்?
முதலில், ரோஹித் ஆர்யா மனநலம் பாதிக்கப்பட்டவர் என செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்த சம்பவத்தின் பின்னால் பெரிய விடயம் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.

அதுவும், மஹாராஷ்ட்ரா மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சரான தீபக் கேசர்க்கருடன் பேசவேண்டும் என ரோஹித் வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து பல விடயங்கள் தெரியவந்துள்ளன.
முன்னாள் கல்வித்துறை அமைச்சரான தீபக் கேசர்க்கர், தற்போது பிரபல கட்சி ஒன்றின் தலைவராக உள்ளார்.
விடயம் என்னவென்றால், தீபக் கேசர்க்கர் 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக இருந்தபோது, Swachhata Monitor என்னும் ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அந்த திட்டத்தின் புராஜக்ட் டைரக்டராக இருந்துள்ளார் ரோஹித். அந்த திட்டத்துக்காக, தான் எடுத்த ஆவணப்படங்களையும் குறும்படங்களையும் பயன்படுத்திக்கொண்ட கல்வித்துறை, அதற்காக தனக்கு பணம் கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார் ரோஹித்.
ஆனால், மாநில அரசோ, ரோஹித் தனது பணிக்கான ஆவணங்களை முறைப்படி சமர்ப்பிக்கவில்லை என்றும், அவர் பல்வேறு பள்ளிகளிலிருந்து பணம் வசூலித்ததாகவும் கூறியுள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான பிரச்சினையை வெளியில் கொண்டுவருவதற்காகத்தான் ரோஹித் பிள்ளைகளை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளார்.
ஆனால், உண்மையில் என்ன நடந்தது, யார் கூறுவது உண்மை என்பதையெல்லாம் இனி கண்டுபிடிக்கமுடியாது. காரணம், ரோஹித் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்.
பிள்ளைகள் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த கட்டிடத்துக்குள் அதிரடியாக நுழைந்த பொலிசார், ரோஹித்தை சரணடையுமாறு வற்புறுத்தியதாகவும், ஆனால் அவர் சரணடைய மறுத்ததுடன், பிள்ளைகளை சுட்டுவிடுவதாக மிரட்டியதாகவும், ஆகவே, பொலிசார் அவரை சுட்டதில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        