யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து அண்ணாமலை கேள்வி
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை கேள்வி
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அதோடு, தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் வன்கொடுமை தாக்குதலுக்குள்ளான வழக்கில், குற்றவாளி மற்றொரு நபருடன் தொலைப்பேசியில் பேசியதாக, பாதிக்கப்பட்ட மாணவி கூறிய தகவலுக்கு நேர்மாறாக, குற்றவாளி தனது மொபைல் போனை, ஏரோப்ளேன் முறையில் வைத்திருந்ததாக, சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி, தான் கூறிய தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில், காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது.
குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கில், திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி வலுப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |