பிரான்ஸ் நாட்டின் அடுத்த ஜனாதிபதி இவரா? மேக்ரானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தகவல்
வரும் ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளன.
அவர் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்துவதைவிட, உக்ரைன் விவகாரத்தில் அதிக ஆர்வம் காட்டியது, அவரது போட்டியாளரான Marine Le Pen என்ற பெண்மணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஆம், நேற்று முன் தினம் இரவு வெளியான கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள், ஜனாதிபதி தேர்தலில் Marine Le Pen 50.5 சதவிகித வாக்குகள் பெறுவார் என்றும், மேக்ரானுக்கோ 49.5 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளன.
அதாவது, சிறிய வித்தியாசத்தில் Marine Le Pen, மேக்ரானைத் தோற்கடித்து ஜனாதிபதியாகும் வாய்ப்புள்ளது என அந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
தான் பிஸியாக இருந்ததால், இந்த வாரத்துவக்கத்தில் நடைபெற இருந்த தேர்தல் தொடர்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றைத் தவிர்த்ததாக மேக்ரான் கூறியுள்ள நிலையில், மக்களில் மூன்றில் ஒரு பங்கினரோ, நாங்கள் தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்கள்.
Miss Le Pen, தனது தேர்தல் வாக்குறுதிகளில் விலைவாசி குறித்த பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தி வருகிறார்.
எரிபொருள் விலை உயர்வு முதலான பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30 வயதுக்குக் கீழ் உள்ள பணியாளர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்பது முதலான அவரது தேர்தல் வாக்குறுதிகளால் அவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில், வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளின் முடிவால், மேக்ரானின் நெருங்கிய உதவியாளர்கள் திகிலடைந்துள்ளதாக மேக்ரானின் கட்சியைச் சேர்ந்த ஒருவரே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.