யார் இந்த ரிஷி சுனக் ? எப்படி பிரதமரானார்? இவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கன்சர்வேடிவ் கட்சியில் பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவோடு அடுத்த பிரதமர் ஆகிறார் ரிஷி சுனக். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
அதுமட்டுமின்றி வெள்ளையர் அல்லாத முதல் பிரதமர், முதல் இந்து பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம்.
குடும்பம்
ரிஷி சுனக்கின் அவரது தாத்தா இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரது பெயர் ராம்தாஸ் சுனக். பஞ்சாப்புக்கு உட்பட்ட குஜ்ரன்வாலா பகுதிதான் அவரது பூர்வீகம் ஆகும்.
நாடுகள் பிரிக்கப்பட்டபோது அந்த பகுதி பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
ராம்தாஸ் சுனக் இந்தியாவில் இருந்து 1935-ம் ஆண்டு கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு உட்பட்ட நைரோபிக்கு சென்றார். 1937-ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த சுஹாக் ராணி சுனக் என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு பிறந்தவர்தான் ரிஷி சுனக்கின் தந்தை யஷ்வீர் சுனக். அவர் கென்யாவில் பிறந்தார்.
அவரது தாய் உஷா, டான்சானியாவில் பிறந்தவர் ஆவார். இவர்கள் அனைவரும் 1960-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்தனர்.
படிப்பு
வின்செஸ்டர் கல்லூரியில் படித்த பின், தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை படிப்பதற்கு ஆக்ஸ்போர்டில் உள்ள லிங்கன் கல்லூரியில் இணைந்தார்.
அதன் பின்னர் அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஃபுல்பிரைட் அறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த பல்கலைகழகத்தில் இருந்து எம்பிஏ படிப்பை முடித்துவிட்டு வெளியேறினார்.
திருமண வாழ்க்கை
படிக்கும் காலத்தில் தன்னுடன் படித்த பெண்ணும், இந்தியாவின் புகழ்பெற்ற பிசினஸ்மேன் 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தியின் மகளுமாகிய அக்ஷதாவை காதலித்தார்.
பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் பெங்களூருவில் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு கிருஷ்ணா, அனோஷ்கா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
வணிக வாழ்க்கை பயணம்
2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளுக்கு இடையே கோல்ட்மேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கி நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி, தனது வணிக வாழ்க்கையைத் தொடங்கினார்.
பின் 2009 ஆம் ஆண்டு இவர் தெலேம் பார்ட்னர்ஸ் என்று அழைக்கப்படும் ஹெட்ஜ் நிதி நிறுவனத்தை இணைந்து நிறுவினார்.
அரசியல் வாழ்க்கை பயணம்
2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளராக ரிச்மாண்ட் தொகுதியில் நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றார் ரிஷி. 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும் ரிஷி சுனக் இதே தொகுதியில் எம்பியாக தேர்வானார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிட்டனின் உள்ளாட்சி அரசியல்துறை அமைச்சராக பதவியேற்ற ரிஷி சுனக், 2019 ஆம் ஆண்டு பிரிட்டன் கருவூலத்தின் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரிட்டன் நிதியமைச்சராக பொறுப்பேற்ற அவர் இந்த ஆண்டு ஜூலை வரை பதவிவகித்தார்.
சொத்து மதிப்பு
இந்தியாவின் ஆறாவது பெரிய பணக்காரரான 'இன்போசிஸ்' என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மகளை திருமணம் செய்துள்ளார்.
இதனால் இவரும், இவரது மனைவியும் சேர்ந்து £730 மில்லியன் நிகரான மதிப்பை வைத்துள்ளனர்.
எப்படி பிரதமானர்?
கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் திகதி பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற லிஸ் ட்ரஸ், அங்கு நிலவிய பொருளாதார பிரச்னைகள் காரணமாக கடந்த வியாழக்கிழமை (20-10-22) தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் பதவிக்காக நடந்த தேர்தலில் பென்னி மோர்டவுன்ட் பின்வாங்கியதை அடுத்து ரிஷி சுனக் பிரதமராகப் பதவி ஏற்க இருந்தார்.
கடந்த ஏழு மாதங்களில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்க உள்ள மூன்றாவது பிரதமர் ரிஷி சுனக் ஆவார். போரிஸ் ஜான்சனுக்குப் பிறகு பதவிக்கு வந்த லிஸ் ட்ரஸ் 45 நாட்கள் பதவியிலிருந்த பிறகு அக்டோபர் 20 அன்று பதவி விலகினார். இதன் பின்னரே ரிஷி சுனக் பிரதமராகப் பதவி ஏற்றார்.