ஆட்டோ ஓட்டுநரின் மகன்; மாநில அணிக்கு விளையாடாமலே MI-இல் இடம் - யார் இந்த விக்னேஷ் புத்தூர்?
அறிமுக போட்டியிலே 3 விக்கெட் வீழ்த்தி MI அணியின் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
CSK vs MI போட்டி
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியில், CSK மற்றும் MI அணிகள் மோதியது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் குவித்தது.
156 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 2வது ஓவரிலே, தனது முதல் விக்கெட்டாக Rahul Tripathi-யை இழந்தது.
அடுத்து ரச்சின் ரவீந்திராவுடன் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட்டும் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தனர்.
அசத்திய விக்னேஷ் புத்தூர்
ருதுராஜ் அரைசதம் அடித்திருந்த நிலையில், 7வது ஓவரில், விக்னேஷ் புத்தூர் என்ற சுழற்பந்து வீச்சாளர் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர், தனது அடுத்த ஓவரில், 7 ஓட்டங்கள் எடுத்திருந்த சிவம் துபேவின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனையடுத்து, தனது 3 ஓவரில், தீபக் ஹூடாவை ஆட்டமிழக்க செய்தார் விக்னேஷ் புத்தூர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், சென்னை அணி நிதானமாக ஆட தொடங்கியது. எளிதான வெற்றி என நினைத்திருந்த CSK ரசிகர்கள், வெற்றியை காண கடைசி ஓவர் வரை காத்திருக்க வேண்டி இருந்தது.
அறிமுக போட்டியிலே, தனது சுழற்பந்து வீச்சில் 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். போட்டி முடிந்ததும் தோனி, அவரை அழைத்து பாராட்டினார்.
யார் இந்த விக்னேஷ் புத்தூர்?
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த, 24 வயதான விக்னேஷ் புத்தூர், ஆட்டோ ஓட்டுனரின் மகன் ஆவார். கேரள மாநிலக்காக கூட விளையாடாத இவர், U14, U19 அணிகளில் விளையாடியுள்ளார்.
மேலும் கேரள கிரிக்கெட் லீக் டி20 தொடரிலும், தமிழ்நாடு பிரிமியர் லீக்கிலும் சில போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் அதில் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை.
இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில், MI கேப்டவுன் அணிக்கு நெட் பௌலராக சென்றார் விக்னேஷ் புதூர்.
அங்கு அவரது பந்து வீச்சு, மும்பை இந்தியன்ஸ் அணியின் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால் ஐபிஎல் ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு மும்பை அணி அவரை வாங்கியது.
முதலில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த விக்னேஷ் புத்தூர், அதன் பின்னர் சக வீரர்களின் அறிவுறுத்தலின் படி, இடது கை சுழற்பந்து வீச்சாளராக மாறியுள்ளார்.
முதல் போட்டியிலே சிறப்பாக செயல்பட்டதால் தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |