பிரித்தானியர்களுக்கு விஷம் விற்ற விவகாரம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு கடும் ஏமாற்றமளிக்கும் தகவல்
நூற்றுக்கும் மேற்பட்ட பிரித்தானியர்களின் மரணத்திற்கு காரணமான, உயிர்க்கொல்லிப் பொருட்களை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட கனேடியர், பிரித்தானியாவில் நீதி விசாரணையை எதிர்கொள்ள மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பத்தினருக்குக் கடிதம்
தற்போது 60 வயதாகும் கென்னத் லா, இன்று பிற்பகல் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். மொத்தம் 40 நாடுகளிலாக 1,200 பொதிகளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் தற்கொலைக்குத் துணை நின்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

தற்கொலைக்கு உதவும் பொருட்களை விற்பனை செய்யும் கனடாவைச் சேர்ந்த இணையதளங்கள் குறித்து தேசிய குற்றவியல் முகமை நடத்திய விசாரணையில், பிரித்தானியாவில் 286 நபர்கள் பொதிகளைப் பெற்றதன் விளைவாக 112 பேர் மரணமடைந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
ஆனால், கனடாவில் நடைபெறும் சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகு, அவரை பிரித்தானியாவிற்கு நாடு கடத்தக் கோரப்போவதில்லை என்று தேசிய குற்றவியல் முகமை மற்றும் கிரவுன் சட்டத்தரணிகள் சேவை ஆகியவை மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கடிதம் எழுதியுள்ளன.
வியாழக்கிழமை அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், கனடாவில் தற்கொலைக்கு உதவியதாகத் தொடரப்பட்ட குற்றச்சாட்டுகளை, லா ஒப்புக்கொள்வார் என்று கனடிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பதிவு செய்துள்ளனர்.
மட்டுமின்றி, இந்த விவகாரங்களைக் கவனமாக மதிப்பீடு செய்த பிறகு, கனடாவில் ஒரே தண்டனை வழங்கும் செயல்முறையின் கீழ், லா என்பவர் செய்த குற்றங்களின் முழு அளவிற்கும் அவருக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஒப்புக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடினமான முடிவு
அத்துடன், சர்வதேச எல்லைகளைக் கடந்து நடைபெறும் தீவிரக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில், இத்தகைய அணுகுமுறை ஒன்றும் வழக்கத்திற்கு மாறானதல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இந்த முடிவு வேதனையளிக்கக்கூடியதாக இருக்கலாம் என்பதையும், சில பாதிக்கப்பட்டவர்களும் துயருற்ற குடும்பத்தினரும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒரு தனி வழக்குத் தொடரப்படுவதைக் காண விரும்பியிருக்கலாம் என்பதையும் நாங்கள் உணர்கிறோம்.

ஆனால், கிடைக்கப்பெற்ற அனைத்து வழிகளையும் விரிவாகப் பரிசீலித்த பின்னரே இந்தக் கடினமான முடிவு எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய கடிதத்தில், பிரித்தானியாவில் அந்த நபர் 330 பொதிகளை அனுப்பியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தற்போது ஒரு பொது விசாரணையை வலியுறுத்தியுள்ளனர். விசாரணையை எதிர்கொள்ளும் லா ஏற்கனவே அமெரிக்கா, இத்தாலி, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் அதிகாரிகளாலும் விசாரிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |