பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்?: இந்திய வம்சாவளியினர் பிரதமர் ஆக வாய்ப்பு...
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று ராஜினாமா செய்வது குறித்து அறிவிக்க இருக்கும் நிலையில், பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரித்தானியாவின் சேன்ஸலரான ரிஷி சுனக் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தார்கள். இந்நிலையில், ரிஷி பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி ரிஷி பிரதமராவாரானால், பிரித்தானியாவின் பிரதமராகும் முதல் இந்திய வம்சாவளியினர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும்.
பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கும் ரிஷி சுனக் குறித்து சில தகவல்கள்...
2020ஆம் ஆண்டு, 42 வயதாகும் ரிஷியை போரிஸ் ஜான்சன்தான் சேன்ஸலராக தேர்ந்தெடுத்தார். கேபினட்டில் அதுதான் அவருடைய முதல் முழுமையான பதவி.
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தின்போது தொழில்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அவர் வழங்கிய பல மில்லியன் பவுண்டுகள் உதவித்தொகை அவரை மிகவும் பிரபலமாக்கியது.
ரிஷியின் தாத்தா பாட்டி பஞ்சாபிலிருந்து வந்தவர்கள். அவரது மனைவியின் பெயர் அக்ஷதா மூர்த்தி, பிரித்தானிய மகாராணியை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவர் என அறியப்படுபவர் அக்ஷதா என்பது குறிப்பிடத்தக்கது.