கனடாவுக்கு புலம்பெயர கணவன், மனைவி, குழந்தைகள் தவிர யாரையெல்லாம் ஸ்பான்சர் செய்யலாம்?: விவரம் செய்திக்குள்
கனடாவில் வாழ்பவர்களின் கணவன் அல்லது மனைவி, குழந்தைகள் முதலானோர் என்ற வகையில், கனடாவிற்கு புலம்பெயரும் 100,000 பேரை ஆண்டொன்றிற்கு கனடா வரவேற்கிறது.
கணவன், மனைவி, குழந்தைகள், தாத்தா, பாட்டி என்ற உறவினர்கள் போக, சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், மற்ற சில உறவினர்களையும் நீங்கள் ஸ்பான்சர் செய்ய கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அனுமதிக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
கனேடிய குடிமக்கள், நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்கள் மற்றும் கனடாவின் இந்தியச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துகொண்டவர்களில், 18 வயதுடையவர்களும் அதற்கு மேற்பட்டவர்களும், தங்கள் குடும்பத்தார் கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெற அவர்களை ஸ்பான்சர் செய்யலாம்.
பெரும்பாலானோர், கணவன், மனைவி, பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி ஆகியோரைத்தான் ஸ்பான்சர் செய்கிறார்கள். ஆனால், இன்னும் இரண்டு உறவு முறையினரையும் நீங்கள் ஸ்பான்சர் செய்யலாம்.
பெற்றோரை இழந்த சகோதரர், சகோதரி, சகோதரர் அல்லது சகோதரியின் மகன் அல்லது மகள், பேரக்குழந்தைகள் ஆகியோரையும் ஸ்பான்சர் செய்ய இயலும்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்படும் பட்சத்தில், நீங்கள் பெற்றோரை இழந்த உங்கள் சகோதரர், சகோதரி, சகோதரர் அல்லது சகோதரியின் மகன் அல்லது மகள், பேரக்குழந்தைகள் ஆகியோரையும் ஸ்பான்சர் செய்ய இயலும் என்கிறது கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு.
அவை என்னென்ன நிபந்தனைகள்?
- அவர்கள் உங்கள் இரத்த சம்பந்தமுடையவர்கள் அல்லது தத்தெடுக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
- அவர்கள் தங்கள் பெற்றோர் இருவரையும் இழந்தவர்களாக இருக்கவேண்டும்.
- அவர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்கவேண்டும்.
- அவர்கள் திருமணமானவர்களாகவோ யாருடனும் இணைந்து வாழும் தம்பதியாகவோ இருக்கக்கூடாது.
யாரையெல்லாம் நீங்கள் ஸ்பான்சர் செய்ய முடியாது?
- அவர்களது பெற்றோரில் ஒருவர் உயிருடன் இருக்கும் உங்கள் உறவினர்.
- தங்கள் பெற்றோர் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாதவர்கள்.
- பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள்.
- தங்கள் பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே வேறு யாராலோ வளர்க்கப்படுபவர்கள்.
- தங்கள் பெற்றோர் சிறையில் இருப்பவர்கள்.
இதுபோக, கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்படும் இரத்த சம்பந்தமான அல்லது தத்தெடுக்கப்பட்ட ஒரு உறவினரையும், வயது வரம்பு இன்றி நீங்கள் ஸ்பான்சர் செய்யலாம்.
உங்களுக்கு கனேடிய குடிமக்கள், நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்கள் மற்றும் கனடாவின் இந்தியச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துகொண்டவர்களாகிய உறவினர் யாரும் உயிருடன் இல்லாதபட்சத்தில், நீங்கள் ஒருவரை ஸ்பான்சர் செய்யலாம்.
நீங்கள் ஸ்பான்சர் செய்யும் உறவினருக்கு கணவன்/மனைவி அல்லது அவர்களை சார்ந்து வாழும் குழந்தைகள் இருந்தால், அவர்களும் கனடா வர விரும்பினால், அவர்களையும் நீங்கள் உங்கள் ஸ்பான்சர்ஷிப் விண்ணப்பத்தில் இணைத்துக்கொள்ளவேண்டும்.
மேலதிக விவரங்களுக்கு...
https://www.cicnews.com/2021/10/who-you-can-sponsor-for-canadian-immigration-1019470.html#gs.elbi7l