யார் வந்தாலும் நாங்கள் தயார்...! எதிரணிகளுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் முகமது ஹபீஸ்
பாகிஸ்தான் அணி எந்த அணியையும் சந்திக்க தயாராக உள்ளது என அந்த அணியின் ஆல் ரவுண்டர் முகமது ஹபீஸ் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள பாகிஸ்தான் அணி, ஞாயிற்றுக்கிழமை அதன் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் ஸ்காட்லாந்துடன் மோதவிருக்கிறது.
குரூப் 2 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, குரூப் 1 புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடிக்கும் அணியுடன் அரையிறுதி சுற்றில் மோதும்.
குரூப் 1 புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடிக்க ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று 41 வயதான முகமது ஹபீஸ் கூறியதாவது, கிரிக்கெட் போட்டி என்று வரும்போது யாருக்கு எதிராக விளையாட போகிறோம் என்பதைப் பற்றி நாங்கள் யோசிப்பதில்லை.
எங்கள் தன்னம்பிக்கை அதிகமாக இருப்பதால், சிறப்பாக அணியை கட்டமைத்து விளையாடி வருகிறோம் என்பதால், யார் வந்தாலும் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆனால் முதலில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டம் உள்ளது, எனவே அவர்களுக்கு எதிராகவும் அதே தீவிரத்துடனும் நம்பிக்கையுடனும் விளையாட வேண்டும்.
தேசத்திற்காக கோப்பையை வெல்வதே குறிக்கோள், அதற்கு நாங்கள் நெருக்கமாக இருக்கிறோம்.
எந்தப் போட்டியிலும் நீங்கள் முதல் போட்டியில் வென்றால், அது உங்களுக்கு நம்பிக்கையைத் தரும், எனவே நாங்கள் இந்தியாவை வென்றபோது அது எங்கள் நம்பிக்கையை பெரிதும் அதிகரித்தது.
நான் இந்தியாவுக்கு எதிரான பல உலகக் கோப்பை போட்டிகளில் ஒரு பகுதியாக இருந்தேன், அந்த தோல்விகளுக்குப் பிறகு நாங்கள் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டியிருந்தது, ஆனால் நாங்கள் வலுவாக மீண்டு வந்தோம்.
இந்த முறை நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம், இந்தியாவை வீழ்த்திய அந்த அணியில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் இந்த உலகக் கோப்பையில் கவனம் செலுத்துகிறேன், எனவே இந்த போட்டிக்குப் பிறகு ஓய்வு குறித்து முடிவு எடுப்பேன் என்று முகமது ஹபீஸ் கூறியுள்ளார்.