ஏன் எங்கள் பணத்தை வீணாக்குகிறீர்கள்?... மன்னர் சார்லசுக்கு இங்கிலாந்திலும் எதிர்ப்பு
பிரித்தானிய மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து அவரது மூத்த மகனான சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றதிலிருந்தே, பல நாடுகள் மன்னராட்சி குறித்த தங்கள் விருப்பமின்மையை வெளிப்படுத்திவருகின்றன.
பிரித்தானியாவின் கீழ் அடிமைப்படுத்தப்பட்டிருந்த பல நாடுகள், தாங்கள் காலனி ஆதிக்கத்தின்போது அனுபவித்த கொடுமைகளை மீண்டும் நினைவுபடுத்தி வருகின்றன.
பிரித்தானிய மன்னராட்சியின் கீழிருக்கும் நாடுகள் சில, இனி மன்னராட்சி வேண்டாம் என குரல் கொடுக்கத் துவங்கியுள்ளன.
பிரித்தானியாவுக்குள்ளேயே எதிர்ப்பு
இதற்கிடையில், பிரித்தானியாவுக்குள்ளேயே மன்னர் சார்லசுக்கும், மன்னராட்சிக்கும் எதிர்ப்பு உருவாகி வருகிறது. முன்பு சார்லஸ் வேல்ஸ் இளவரசராக இருந்தார். அவர் மன்னரானதும், இனி எங்களுக்கு வேல்ஸ் இளவரசர் என ஒருவர் தேவையில்லை என வேல்ஸ் நாட்டிலிருந்து எதிர்ப்புக் குரல்கள் வெளியாகின.
கடந்த சில மாதங்களில் சில பொது நிகழ்ச்சிகளில் மன்னர் சார்லஸ் கலந்துகொண்டபோது அவர் மீது முட்டைகள் வீசப்பட்டன.
தொடரும் எதிர்ப்பு
இந்நிலையில், சமீபத்தில் நகரமாக அங்கீகரிக்கப்பட்ட இங்கிலாந்திலுள்ள Colchester என்ற இடத்துக்குச் சென்றிருந்தனர் மன்னர் சார்லசும் ராணி கமீலாவும்.
அங்குள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பிறந்துள்ள காண்டாமிருகம் ஒன்றிற்கு பெயர் வைத்தார் மன்னர்.
மன்னருக்கு வரவேற்பளிக்கப்பட்ட அதே நேரத்தில், அங்கு கூடியிருந்த சிலர் மன்னருக்கும் மன்னராட்சிக்கும் எதிராக குரல் எழுப்பினர்.
மெகாபோன் ஒன்றைப் பயன்படுத்தி ஒருவர், ‘உங்களை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லுங்கள் சார்லஸ்’ என சத்தமிட்டார்.
நீங்கள் எங்கள் மன்னரில்லை என்று கூறும் பதாகைகளுடன் நின்ற சிலர், ஏன் எங்கள் பணத்தை வீணாக்குகிறீர்கள் என்றும், உங்களுக்கு மக்களாட்சியில் நம்பிக்கையில்லையா என்றும் கேள்வி எழுப்பினர்.
எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காக மன்னர் சார்லஸ், மக்களைப் பார்த்து கையசைத்துக்கொண்டே சென்றுவிட்டார்.