உலக கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததற்கு இதுதான் காரணம்! தமிழக வீரர் அஸ்வின் கருத்து
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததன் காரணத்தை குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அறிவிப்பு
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் திகதி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இதில் ரோகித் சர்மா(கேப்டன்), ஹர்திக் பாண்டியா(துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், பும்ரா, ஷமி, சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அறிவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் ஆப் ஸ்பின் பவுலர்கள் யாரும் இடம் பெறாதது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
அஸ்வின் கருத்து
இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஆப் ஸ்பின் பவுலரான தனக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற காரணத்தை இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான ரவிசந்திரன் அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், 2015ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணி பலம் வாய்ந்த ஒருநாள் கிரிக்கெட் அணியாக விளங்கியது, அதற்கு முக்கிய காரணம் பவர் பிளே முடிந்து 5 வீரர்கள் வெளிவட்டத்தில் பீல்டிங் செய்யலாம்.
இதனால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் 10 ஓவர்களுக்கு 40 முதல் 45 ஒட்டங்கள் மட்டுமே விட்டு கொடுத்து விக்கெட்டையும் கைப்பற்றி எதிரணியை திணறடித்தார்கள்.
ஆனால் 2015ம் ஆண்டு பிறகு தற்போது பவர் பிளே முடிந்து 4 வீரர்கள் வெளிவட்டத்தில் பீல்டிங் செய்யலாம். எனவே அணியின் சராசரி ஸ்கோர்கள் 250 முதல் 260 என்பதில் இருந்து தற்போது 300 முதல் 320 என மாறியுள்ளது.
இதனால் என்னைப் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் சராசரி ஓட்ட விகிதம் 5 ஓட்டங்களை தாண்டி சென்றது. மேலும் சுழற்பந்து வீச்சாளர்கள் பீல்டிங் மற்றும் பேட்டிங்கிலும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற நிலை உருவானது.
இது போன்ற காரணங்களால் தான் இந்திய அணியில் தனக்கான வாய்ப்பு குறைந்தது என தமிழக வீரர் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |