அஸ்வினை அணியில் எடுக்காதது ஏன்? லார்ட்ஸ் டெஸ்ட்டில் டாஸ் போட்ட போது கோஹ்லி விளக்கம்
இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினை எடுக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று துவங்கியது. ஆனால் போட்டி டாஸ் போட்ட சிறிது நேரத்திலே மழை குறுக்கிட்டதால், ஆட்டம் இப்போது மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டியில் அஸ்வின் சேர்கப்படாமல் இருந்ததால், இந்த லார்ட்ஸ் போட்டியில் அவர் நிச்சயம் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏனெனில் அஸ்வின் லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக பந்து வீசுவதுடன், பேட்டிங்கும் நன்றாக செய்வார். இதனால் அவர் நிச்சயமாக இந்த டெஸ்ட்டில் இருப்பார் என்று நம்பப்பட்டது.
ஆனால் இந்த போட்டியிலும் அஸ்வின் இல்லை. இது ரசிகர்கள் பலருக்கும் கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது.
Feels like England have picked the right team & India haven’t … Ashwin should have played for India to give them more Batting plus his quality bowling … He bowls well in all conditions … Perfect bowling day … Feels like a wickets day … #ENGvIND
— Michael Vaughan (@MichaelVaughan) August 12, 2021
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் இந்த போட்டி டாஸ் போட்ட பின்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த போட்டிக்கு இங்கிலாந்து சரியான அணியைத் தேர்வு செய்துள்ளது.
ஆனால், இந்தியா அப்படியல்ல, கூடுதல் பேட்டிங் பலம் மற்றும் தரமான பந்துவீச்சுக்காக அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். எல்லாச் சூழல்களிலும் அவர் நன்குப் பந்துவீசக் கூடியவர் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து இது குறித்து டாஸுக்கு பின் கோஹ்லி கூறுகையில், ஆட்டத்துக்கு முந்தைய 12 பேரில் அஸ்வினும் இடம்பெற்றிருந்தார்.
ஆனால் ஆடுகளத்தைப் பார்த்த பிறகு நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதே அணிக்குச் சரியாக இருக்கும் எனத் தோன்றியது.
அதுவே அஸ்வின் இல்லாததற்கு காரணம் என்று கூறியுள்ளார்.