ரூ.18,000 கோடி நிறுவனத்தை 74 ரூபாய்க்கு விற்ற தொழிலதிபர் - ஏன் தெரியுமா?
சாதாரண குடும்ப பின்னணியை கொண்டவர் திடீரென கோடீஸ்வரர் ஆவதும், கோடீஸ்வர வாழ்க்கை வாழ்பவர் தனது செல்வதை இழப்பதும் நடப்பதும் உண்டு.
அதே போல் துபாயில் தனி விமானம், ஆடம்பர கார்கள், சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர், தனது செல்வத்தின் பெரும்பகுதியை இழந்துள்ளார்.
பி.ஆர்.ஷெட்டி
1942ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிறந்த பி.ஆர்.ஷெட்டி(B.R.Shetty) என்ற சாமானிய மனிதர், 1973 ஆம் ஆண்டு, ரூ.665 கடன் பெற்ற பணத்துடன், வேலை தேடி துபாய்க்கு சென்றார்.
மருந்தாளர்(pharmacist) படிப்பை முடித்திருந்த அவர், துபாயில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலைக்கு சேர்ந்தார்.
அந்த தொழிலை கற்று கொண்டு, அதன் மூலம் கிடைத்த தொடர்புகளை வைத்து, New Medical Centre (NMC) என்ற பெயரில் சிறிய மருந்தக க்ளினிக்கை தொடங்கினார். இதில் ஒரே ஒரு மருத்துவராக, அவரது மனைவி சந்திரகுமாரி ஷெட்டி பணியாற்றி நிர்வகித்து வந்தார்.
நாளடைவில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாக NMC வளர்ச்சி அடைந்தது. 8 நாடுகளில் அதன் கிளைகள் தொடங்கப்பட்டு, 1200 மருத்துவர்களுடன் நாளொன்றுக்கு 11,000 நோயாளிகளை நிர்வகித்து வந்தது.
பணக்கார இந்தியர்கள் பட்டியலில் இடம்
லண்டன் பங்குச் சந்தையின் பிரீமியம் பிரிவில் பட்டியலிடப்பட்ட அபுதாபியின் முதல் நிறுவனமாக NMC ஆனது.
அந்த காலகட்டத்தில் அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவதில் சிக்கலை எதிர்கொள்வதை கவனித்த பி.ஆர்.ஷெட்டி, UAE Exchange என்ற நிறுவனத்தை துவக்கினார்.
இந்த நிறுவனம், பணம் அனுப்புதல், அந்நியச் செலாவணி மற்றும் பில் செலுத்தும் சேவைகளை கையாண்டது. 2016 ஆம் ஆண்டு, இந்த நிறுவனம் 31 நாடுகளில் 800 அலுவலகங்களுடன் இயங்கியது.
போர்ப்ஸ் வெளியிட்ட பணக்கார இந்தியர்கள் பட்டியலில் 42வது இடத்தை பிடித்தார். இவருக்கு, இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
இவ்வாறு தனது தொழிலில் வளர்ச்சிப்பாதையில் சென்ற அவர், 2019 ஆம் ஆண்டு பெரிய சரிவை சந்தித்தார்.
ரூ.74க்கு நிறுவனம் விற்பனை
இங்கிலாந்தைச் சேர்ந்த Muddy Waters என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம், ஷெட்டியின் நிறுவனம் 1 பில்லியன் டாலர் கடனை செலுத்த வேண்டியிருப்பதாகவும், ஆனால் அதனை முதலீட்டாளர்களிடம் மறைத்துள்ளாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்த குற்றச்சாட்டையடுத்து, அவரின் நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தது. இறுதியில் அவர் தனது ரூ.12,478 கோடி நிறுவனத்தை இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நிறுவனத்திற்கு வெறும் ரூ.74க்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதற்கிடையே 2020 ஆம் ஆண்டு, அபுதாபி கமர்ஷியல் வங்கி NMC ஹெல்த் நிறுவனத்தின் மீது கிரிமினல் வழக்கை பதிவு செய்தது.
இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி, ஷெட்டியின் கணக்குகள் அனைத்தையும் முடக்கியதோடு, அவரது நிறுவனத்தையும் கருப்பு பட்டியலில் சேர்த்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |