பிரதமர் தேர்தலில் வேகமாக முன்னேறிய ரிஷி தோல்வியை தழுவியது ஏன்?
பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி வந்தார்.
நடுவில் சறுக்கலை சந்தித்து, இறுதியில் தோல்வியைச் சந்தித்துள்ளார் ரிஷி.
பிரித்தானியாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமையைப் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட ரிஷி சுனக் பிரதமருக்கான போட்டியில் தோல்வியைத் தழுவியது, ஒரு சாராருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது...
பிரித்தானியாவின் பிரதமருக்கான போட்டியில் பரபரவென முன்னேறிய ரிஷி, பாதி வழியில் சறுக்கத் துவங்கினார். போட்டியில் தாமதமாக இணைந்த லிஸ் ட்ரஸ்ஸோ, வேகமாக முன்னேறத் துவங்கி, இன்று பிரித்தானியாவின் பிரதமாராகியுள்ளார்.
ரிஷி திடீரென பின்னடைவைச் சந்திக்கக் காரணம் என்ன?
போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்த உடனேயே, ‘Ready for Rishi’ என்ற பெயரில் தனது பிரச்சார வீடியோவை வெளியிட்டார் ரிஷி. அது ஆரம்பத்தில் அவருக்கு உதவினாலும், பின்னர், தனது கட்சித்தலைவரும், அரசியலில் தன் முன்னோடியுமான போரிஸ் ஜான்சனுக்கு செய்த நம்பிக்கை துரோகமாக பார்க்கப்பட்டது.
ஆரம்பத்தில் பேராதரவைப் பெற்ற ரிஷியின் கூட்டத்தைச் சேர்ந்த சாஜித் ஜாவித், நாதிம் ஸவாஹி மற்றும் மோர்டாண்ட் ஆகியோர் அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்க, தொடர்ந்து பலர் லிஸ் பக்கம் திரும்பினார்கள்.
போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததும் சுனக் பிரபலமடையத் துவங்கினாலும், அவர் போரிஸ் ஜான்சனுக்கு துரோகம் செய்துவிட்டார் என்ற விடயம் அழுத்தமாக பதிந்துவிட்டது.
இதற்கிடையில், வெளியான வீடியோ ஒன்று ரிஷியின் பெயரை மொத்தமாக நாசப்படுத்திவிட்டது. அந்த வீடியோவில், நகர்ப்புற திட்டங்களுக்காக, ஏற்கனவே வறுமையிலிருக்கும் கிராமப் பகுதிகளிலிருந்து தான் பணம் வாங்கியதாக ரிஷி ஒப்புக்கொண்ட விடயம் பலரையும் ஆத்திரமடையச் செய்தது.
அடுத்ததாக, ரிஷியின் மனைவியான அக்ஷதா, பிரித்தானிய மகாராணியாரை விட பணக்காரர் என்ற செய்தி வெளியாகி, பலரையும் புருவம் உயர்த்தவைத்தது.
REUTERS
கூடவே, அக்ஷதாவுக்கு, அவர் பிரித்தானியாவில் வாழ்ந்தாலும், பிரித்தானியாவில் வரி செலுத்தவேண்டாம் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ள விடயமும், அதனால் அக்ஷதா பெருமளவில் வரி செலுத்தியிருக்கவேண்டிய பணத்தை மிச்சப்படுத்தியதும் பிரித்தானியர்களை கோபப்படுத்தின.
மேலும், ரிஷி அமெரிக்காவிலிருந்து பிரித்தானியா திரும்பியபிறகும், அவர் அமெரிக்க கிரீன் கார்டை தொடர்ந்து தக்கவைத்திருந்த விடயம், மக்கள் விலைவாசியால் அவதியுறும்போது விலையுயர்ந்த ஆடைகள் அணிந்தது, பெரிய வீட்டில் வாழ்ந்தது என பல விடயங்கள் சேர்ந்துகொள்ள, பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின் என திருக்குறள் கூறுவது போல, அத்தனை குற்றச்சாட்டுகளும் இணைந்து ரிஷியைத் தோல்வியைத் தழுவ வைத்துவிட்டன!