ஏன் எறும்புகள் வரிசையாக செல்கின்றன?
எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன. எறும்புகளில் குறிப்பிடத்தக்க பரிமாணம் நடைபெற்று சுமார் 130மி 10,000 - 12,000 வகையான எறும்புகள் உலகம் பூராவும் வாழ்கின்றன.
இவை நம்மைவிட அளவில் மிகச்சிறியவை (கிட்டதட்ட 10000 மடங்கு சிறியவை). பூமியில் உள்ள மொத்த எறும்புகளின் எண்ணிக்கை பூமியில் உள்ள மொத்த மனிதர்களின் எண்ணிக்கைக்கு சமமானது என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன.
சில எறும்புகளை பூதக்கண்ணாடியினால் மட்டுமே பார்க்க முடியும். அதிகபட்சமாக 3 இன்ச் அளவுடைய எறும்புகளும் இருக்கின்றன. எறும்புகள் எப்போதும் தனித்து வாழாது. கூட்டம் கூட்டமாகவே வாழும். இக்கூட்டத்தை காலனி என்பார்கள்.
நாம் ஏறும்புகளை எப்போதும் வரிசையாக செல்வதை அவதானித்து இருப்போம். உண்மையில் எறும்புகள் ஏன் வரிசையாக செல்கின்றன என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
வரிசையாக செல்வது ஏன்?
எறும்புகள் எப்பொழுதும் கூட்டணியாக தான் வாழும், தங்களின் வசிப்பிடம் அல்லது இனத்தைப் பொருத்து குழுக்களாக வாழும். எனவே, உணவு தேட எறும்புகள் செல்லும் பொழுது "பீரோமோன் (Pheromone)" என்னும் இரசாயனத்தை வழியில் விட்டுச்செல்லும், இதனால் முதலில் செல்லும் எறும்பின் இரசாயனத்தை, அதன் பின் வரும் எறும்பு பின் தொடரும், தானும் இரசாயனத்தை விட்டுச் செல்லும்.
இதனால், அனைத்து எறும்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக செல்லும். எனவே, அவை தங்களின் வழித்தடத்தை உறுதிசெய்து கொண்டு, திரும்பி வரும் பொழுதும் அவ்வாறே இரசாயனத்தை உமிழ்ந்து கொண்டு செல்லும்.
இதனால், அவை வழி மாறாமல் பயணிக்கும், எதிராளி யாராவது வந்தால் கூட எளிதாக அவை அடையாளம் கண்டுவிடும், மேலும் அதை கூட்டமாக எதிர் கொள்ள இவற்றுக்கு அந்த இரசாயன வித்தை உதவும்.
உரையாடல் கொள்ளும் எறும்புகள்
எறும்புகள் தங்களுக்குள்ளான கருத்துப் பரிமாற்றத்தை ஒன்றுக்கொன்று மோதி, அல்லது தங்களின் கால்களை உரசி வெளிப்படுத்தும், சைகை மொழி போல. அவை, தங்களின் முகத்தில் இருக்கும் கொடுக்குகள் மூலமாக இரசாயனத்தை உமிழ்வதில் கூட, கருத்துப் பரிமாற்றத்தை நிகழ்த்துபவை.
அவை பல விதமான வாசனை வேறுபாடுகளைக் கொண்டது. எனவே, அந்த குறிப்பிட்ட இரசாயனம் என்ன தகவலை உணர்த்துகிறது, என்பதை அந்த குழுக்களில் இருக்கும் எறும்புகள் அறிந்துகொள்ளும்.
எதிரே வரும் எறும்புகளை மோதுவது எதற்காக என்றால், அவை வந்த வழி பாதுகாப்பானது தானா, அங்கே உணவு இருக்கிறதா, வேறு ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என்பது போன்ற உறுதிப்படுத்துதலுக்காக தான்.