விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பிரான்ஸ் நாட்டுப்பெண்: ஒரு எச்சரிக்கை செய்தி
சுவிஸ் விமான நிலையம் ஒன்றில் விமானம் ஏற முயன்ற பிரான்ஸ் நாட்டுப் பெண்ணொருவர், முறைப்படி அவரிடம் பயண ஆவணங்கள் இருந்த நிலையிலும் தடுத்து நிறுத்தப்பட்டார்.
தடுத்து நிறுத்தப்பட்ட பிரான்ஸ் நாட்டுப்பெண்
சுவிட்சர்லாந்தின் சூரிக் விமான நிலையத்தில் விமானம் ஏற முயன்ற பிரான்ஸ் நாட்டுப் பெண்ணொருவரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.
பிரான்சிலுள்ள Sausheim என்னுமிடத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பாஸ்போர்ட்டில் பிரச்சினை இருப்பதாக எல்லை பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை அனுப்பியதைத் தொடர்ந்து அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
ஒரு எச்சரிக்கை செய்தி
நடந்தது என்னவென்றால், கடந்த ஆண்டு ஆகத்து மாதம் Mulhouse என்னுமிடத்தில் காரில் பயணித்துக்கொண்டிருந்த அந்தப் பெண் கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளார்.
காரிலிருந்த அவரது கணினி மற்றும் ஆவணங்களுடன் அவரது காரை அந்த கொள்ளையர்கள் கடத்திச் செல்ல, பொலிசில் புகாரளித்துள்ளார் அவர்.
இரண்டு நாட்களுக்குப் பின் அந்த கொள்ளையர்கள் பொலிசில் சிக்க, அவரது கார் மற்றும் காரிலிருந்த பொருட்கள் அவரிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளன.
2026 Elliott Cowand Jr/Shutterstock
ஆனால், அவரது பாஸ்போர்ட் திருட்டுப் போனதாக அரசு ஆவணங்களில் பதிவாகியுள்ளது!
இந்நிலையில், சுவிட்சர்லாந்துக்குச் சென்ற அவர் சூரிக்கிலிருந்து விமானம் ஏற முயல, அவரது பாஸ்போர்ட் திருடப்பட்ட பாஸ்போர்ட் என எல்லை பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்க, அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏறவிடாமல் தடுத்துவிட்டார்கள்.
அதாவது, பிரான்சைப் பொருத்தவரை, அந்தப் பெண், தனது பாஸ்போர்ட் திருட்டுப் போன உடனே, புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருக்கவேண்டுமாம்.
திருடப்பட்ட அவரது பாஸ்போர்ட் திரும்பக் கிடைத்தாலும், அதை அவர் பயன்படுத்தக்கூடாதாம். அதற்கு பதிலாக புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, புதிய பாஸ்போர்ட் பெற்றபின், அதைத்தான் பயன்படுத்தவேண்டுமாம்.
ஆக, கணவனும் மனைவியுமாக சுவிட்சர்லாந்துக்குச் சென்றிருந்த நிலையில், அந்தப் பெண்ணின் பாஸ்போர்ட்டில் பிரச்சினை என தெரியவந்ததால், அவர் இல்லாமலே அவரது கணவர் மட்டும் புறப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |