ஹீலியம் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு சாசனம் - ஏன் தெரியுமா?
இந்திய அரசியலமைப்பு சாசனம் ஹீலியம் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதன் காரணம் குறித்து பார்க்கலாம்.
இந்திய அரசியலமைப்பு தினம்
இந்த அரசியல் சாசனம் கடந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் திகதி, இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
1947 ஆம் ஆண்டு இந்தியா, பிரித்தானிய அரசிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியாவிற்கு தனி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.

இதற்காக இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தலைமையில், அரசியல் அமைப்பு நிர்ணய குழு உருவாக்கப்பட்டது. அம்பேத்கர் அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசியமைப்பில் இருந்து சில அம்சங்கள் இதில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

இந்த அரசியல் சாசனத்தை உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள்,18 நாட்கள் தேவைப்பட்டன. இதன் இறுதி வடிவத்தில், 395 ஷரத்துகள், 8 அட்டவணைகள் இடம் பெற்றுள்ளது.
இது உலகில் கையால் எழுதப்பட்ட நீண்ட ஆவணங்களில் ஒன்றாகும். இதன் ஆங்கில வடிவத்தில் மொத்தம் 1,17,369 வார்த்தைகள் உள்ளன.

ஆங்கிலத்தில் பிரேம் பிஹாரி நாராயண் ரைசாடாவும், இந்தியில் வசந்த் கிருஷ்ணன் வைத்யாவும் இதனை எழுதினர். இதில், 283 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
ஹீலியம் பெட்டகத்தில் பாதுகாப்படுவது ஏன்?
கையால் எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆவணத்தின் பிரதி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்தில் ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்ட பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அரசியலமைப்பு ஆவணத்தின் அசல் பிரதியை கரையான் அரிப்பு போன்றவற்றில் இருந்து பாதுகாக்க நாப்தலீன் பந்துகளால் தனித்தனியாக ஃபிளானல் தாள்களில் சுற்றப்பட்டன.
மேலும், அது கருப்பு மையால் எழுதப்பட்டுள்ளதால், நாளடைவில் ஆக்ஸிஜனேற்றம் காரணமாக ஆவியாகி மெதுவாக மங்கிவிடும்.

ஆக்ஸிஜனேற்றத்தை நிறுத்தி, மை மங்குவதை தவிர்க்க ஒரு கன மீட்டருக்கு 50 கிராம் ஈரப்பதம் அளவைப் பராமரிக்க வேண்டும் என கண்டறியப்பட்டது.
ஹீலியம் வேறு எந்த வேதியியல் பொருளுடனும் வினை புரியாது என்பதால், ஹீலியம் நிரப்பட்ட பெட்டகத்தில் வைத்து இந்திய அரசியமைப்பு சாசனம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு 2 மாதங்களுக்கு ஒரு முறையும் இந்த பெட்டகம் சரிபார்க்கப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஹீலியம் வாயு மாற்றப்படுகிறது.
தேசிய இயற்பியல் ஆய்வகம், அமெரிக்காவை தளமாகக் கொண்ட கெட்டி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த ஹீலியம் பெட்டகத்தை உருவாக்கியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |