கனடாவில் தொடர்ந்து மாயமாகும் பாகிஸ்தான் அரசின் விமான ஊழியர்கள் - என்ன காரணம்?
பாகிஸ்தான் அரசின் விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின்(PIA) ஊழியர்கள் கனடாவிற்கு சென்று அங்கு மாயமாகி வருவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
கனடாவில் மாயமாகும் PIA ஊழியர்கள்
PIA நிறுவனத்தின் மூத்த விமானப் பணிப்பெண்ணான ஆசிப் நஜாம், கடந்த நவம்பர் 16 ஆம் திகதி லாகூரிலிருந்து PK-789 விமானத்தில் டொராண்டோவிற்கு வந்தார். நவம்பர் 19 அன்று லாகூருக்கு திரும்பும் PK-798 விமானத்தில் அவர் பணிக்கு வரவில்லை.
இது குறித்து அவரிடம் நிறுவனம் தரப்பில் இருந்து தொலைபேசியில் கேட்டபோது, உடல்நிலை பாதிப்பு என முதலில் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தனது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு மாயமாகியுள்ளார்.
கனடாவில், இந்த ஆண்டில் இத்துடன் 3 PIA நிறுவன ஊழியர்கள் இதே போல் மாயமாகியுள்ளனர்.

இதே போல் கடந்த ஆண்டில் 4 பேர், 2022-23 காலகட்டத்தில் 8 பேர் என கடந்த 3 ஆண்டுகளில் 15 PIA நிறுவன ஊழியர்கள் கனடாவில் மாயமாகியுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் இஸ்லாமாபாத்திலிருந்து டொராண்டோவுக்குச் சென்ற விமானத்தில் இருந்த மற்றொரு விமானப் பணிப்பெண் கனடாவில் காணாமல் போனார். அவரது அறையில் "நன்றி PIA" என்ற ஒரு குறிப்பு கண்டெடுக்கப்பட்டது.
என்ன காரணம்?
பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, குறைந்த சம்பளம் மற்றும் PIAவை தனியார் மயமாகும் முயற்சியால் வேலை பாதுகாப்பின்மை ஆகிய காரணங்களால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக கூறப்படுகிறது.
கனடாவில் அகதிகளுக்கான சட்டத்தில் உள்ள சலுகைகளை பயன்படுத்தி இந்த ஊழியர்கள் அங்கேயே தங்கி விடுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

விமான நிறுவன ஊழியர்களுக்கு மற்ற பயணிகளை போல் வழக்கமா விசா தேவைப்படுவதில்லை.
கடந்த சில ஆண்டுகளில், பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து, பல்வேறு காரணங்களுக்காக கனடாவில் புகலிடம் கோர விண்ணப்பிப்பது அதிகரித்துள்ளது.
கனடாவில், புகலிடம் கோருவோரை எந்த சூழ்நிலையிலும் சந்தேகத்துடன் நடத்தக்கூடாது என்று சட்டம் கூறுகிறது.
பாகிஸ்தானில் என் உயிருக்கு ஆபத்து உள்ளது, மத/அரசியல்/பொருளாதார/பாலின துன்புறுத்தல் உள்ளது" என்று யாராவது கூறினால், அவர்கள் உடனடியாக நாட்டில் தங்கவும், வேலை செய்யவும், சட்ட உதவி பெறவும் அனுமதி பெறுகிறார்கள்.

கனடாவின் விமான நிலையத்தில் இருந்தே புகலிடம் கோரலாம். அதன் பிறகு, கனடாவிற்குள் நுழைந்த பிறகு, ஒருவருடன் தங்கி, புகலிடம் கோரி வழக்குத் தாக்கல் செய்யலாம். புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், மேல்முறையீடு செய்யலாம்.
இந்த செயல்முறை முடிய சில ஆண்டுகள் ஆகும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் கனடாவில் வேலை செய்யவும், இலவச மருத்துவ சிகிச்சை பெறவும், திருமணம் செய்து நிதியுதவி பெறவும் அனுமதி வழங்கப்படுகிறது.
இத்தகைய சம்பவங்களை தடுக்க ஊழியர்களிடமிருந்து பத்திரங்கள் (bond) பெறுவது, விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டுகளைப் பறிமுதல் செய்வது, கனடா செல்லும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச வயதை 50 ஆக அதிகரித்தது என பல்வேறு நடவடிக்கைகளை PIA மேற்கொண்டும், ஊழியர்கள் மாயமாகுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |