ஜாமீன் பெற்ற உடனே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
ஜாமீன் பெற்ற உடனேயே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் கேள்வி
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ம் திகதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால், அவருடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, 472 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி கடந்த செப்டம்பர் 26-ம் திகதி விடுதலையானார்.
பின்னர், ஒரு நாள் இடைவெளியில் 28 -ம் திகதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு 29 -ம் திகதி பதவியேற்றார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி தொடர்பான பண மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வித்யாகுமார் என்பவர், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது மனு தாரர் தரப்பு வழக்கறிஞர், "அமைச்சர் பதவியில் இல்லை என்று கூறி ஜாமீன் வாங்கிய செந்தில் பாலாஜி ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சரானார். இதனால், அமைச்சரை எதிர்த்து சாட்சி கூற தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள், "மனுதாரரின் குற்றச்சாட்டு நியாயமானதுதான். குற்றம் சாட்டப்பட்டவர் அமைச்சராக இருந்தால் எப்படி பயமின்றி சாட்சி அளிப்பார்கள்" என்றார்.
பின்னர் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள், "செந்தில் பாலாஜி அமைச்சர் ஆகியுள்ளதால் விசாரணை பாதிக்கப்படுகிறது என்றால், நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியிருக்கும். ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை, எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிட்டனர்.
ஆனால், மனுவை தள்ளுபடி செய்ய மறுத்த நீதிபதிகள், "ஜாமீன் பெற்ற உடனேயே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றது ஏன் என்று அவர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கூறி வழக்கை டிசம்பர் 13-ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |