எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... விஜய் ஏன் இதை செய்யவில்லை? தமிழிசை கேள்வி
எம்.ஜி.ஆரின் நினைவு தினத்திற்கு விஜய் ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என்று பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழிசை கேள்வி
தந்தை பெரியாரின் 51வது நினைவு தினமான நேற்று நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பெரியாருக்கு அஞ்சலி செலுத்திய விஜய், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்திற்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்??? பெரியாருக்கு அஞ்சலி செலுத்திய தவெக தலைவர் விஜய், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்திற்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை...?
டெல்லியில், பிரதமர் எந்தக் கட்சி சார்ந்தவராக இருந்தாலும் முன்னாள் பிரதமர்களின் நினைவு தினங்களில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் மட்டுமல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75-ஆண்டு கால அரசியலிலும் முக்கிய பங்காற்றிய எம்.ஜி.ஆருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டுமில்லையா ? இது ஒரு சாமானியனின் கேள்வி ?" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |