சிறுவயதில் வறுமை.. தாய்க்கு செய்த சத்தியத்தை காப்பாற்றிய கிரிக்கெட் வீரர்!
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் பாவெல் வறுமையில் இருந்து குடும்பத்தை மீட்பேன் என்று தாய்க்கு செய்த சத்தியத்தை காப்பாற்றியுள்ளார்.
நடப்பு தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரோவ்மன் பாவெல், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 16 பந்துகளில் 33 ஓட்டங்கள் விளாசி தனது அணியை வெற்றி பெற வைத்தார்.
அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த வீரராக வலம் வரும் பாவெல், 2017ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டபோது ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. எனினும் மனம் தளராத அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டி ஒன்றில் சதம் விளாசி மிரட்டினார்.
மேலும் இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியிலும் மிரட்டியதைத் தொடர்ந்து, ஐபிஎல் மெகா ஏலத்தில் 2 கோடியே 80 லட்சத்திற்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார். தற்போது கலக்கி வருகிறார்.
ஆனால் சிறுவயதில் பாவெலின் குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. அப்போது தனது தாயிடம் வறுமையில் இருந்து நமது குடும்பத்தை மீட்பேன் என அவர் சாத்தியம் செய்துள்ளார். அதனை தற்போது கிரிக்கெட் விளையாட்டின் மூலம் நிறைவேற்றியுள்ளார். வர்ணனையாளர் இயான் பிஷப் இந்த தகவல்களை கூறியதை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
28 வயதாகும் பாவெல் 37 ஒருநாள் போட்டிகளில் 786 ஓட்டங்களும், 39 டி20 போட்டிகளில் 619 ஓட்டங்களும் எடுத்துள்ளார். நடப்பு தொடரில் 8 போட்டிகளில் 100 ஓட்டங்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.