அறிமுக போட்டியிலேயே 80 பந்தில் சதம்! எந்த வீரரும் செய்யாத சாதனை..மகுடம் சூடிய மேற்கிந்திய தீவுகள்
வங்காளதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுவதுமாக வென்று மேற்கிந்திய தீவுகள் சாதனை படைத்தது.
மஹ்முதுல்லா அதிரடி
மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செயின்ட் கிட்ஸில் நடந்தது.
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்காளதேச அணி 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
Given the treatment by Jangoo🏏🔥#WIvBAN | #WIHomeForChristmas pic.twitter.com/mb5apHvmnz
— Windies Cricket (@windiescricket) December 12, 2024
எனினும் சவுமியா சர்க்கார் 73 ஓட்டங்களும், மெஹிதி 77 ஓட்டங்களும் விளாச அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அதன் பின்னர் கைகோர்த்த மஹ்முதுல்லா, ஜாகிர் அலி கூட்டணி அதிரடியில் மிரட்டியது.
இதன்மூலம் வங்காளதேசம் 5 விக்கெட்டுக்கு 321 ஓட்டங்கள் குவித்தது. மஹ்முதுல்லா (Mahmudullah) 63 பந்துகளில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் விளாசினார். ஜாகிர் அலி (Jaker Ali) 57 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் குவித்தார்.
அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ரூதர்போர்டு 30 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
அமிர் ஜான்கோ
அதன் பின்னர் வந்த அமிர் ஜான்கோ ருத்ர தாண்டவம் ஆடினார். சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 80 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். அவருக்கு பக்கபலமாக மோட்டி 31 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுக்க, மேற்கிந்திய தீவுகள் 45.5 ஓவர்களிலேயே 326 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
அமிர் ஜான்கோ (Amir Jangoo) 83 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
மேலும், அறிமுக ஒருநாள் போட்டியில் குறைந்த பந்தில் (80) சதம் விளாசிய வீரர் எனும் இமாலய சாதனையை படைத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3-0 என ஒருநாள் தொடரை முழுமையாக மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றி மகுடம் சூடியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |