காப்பாற்றிய கிங்! பூரன் தலைமையில் தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்
நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகள்-நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி அதே Amstelveen நகரின் VRA மைதானத்தில் நேற்று நடந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர்கள் மிரட்டலாக ஓட்டங்களை குவித்தனர். விக்ரம்ஜித் சிங் 46 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த எட்வர்ட்ஸ் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். மறுமுனையில் அரைசதம் கடந்த மேக்ஸ் டௌட் 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து அந்த அணியின் விக்கெட்டுகள் சீட்டு கட்டுபோல் சரிந்தன.
Photo Credit: AFP / Punit Paranjpe
ஹோஸின், ஜோசப் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சில் ஓட்டங்கள் எடுக்க திணறிய நெதர்லாந்து, 48.3 ஓவர்களில் 214 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசி விக்கெட்டாக அவுட் ஆன எட்வர்ட்ஸ் 68 ஓட்டங்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் ஹோஸின் 4 விக்கெட்டுகளையும், ஜோசப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Photo Credit: Twitter
Photo Credit: Twitter(@windiescricket)
பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி 60 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது களமிறங்கிய பிரண்டன் கிங் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அவருக்கு துணையாக ஆடிய கார்ட்டி 66 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்தார்.
அரைசதம் கடந்த கிங் 90 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 91 ஓட்டங்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணி 45.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Photo Credit: Getty Images
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் வென்றது. கிங் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி 4ஆம் திகதி நடக்க உள்ளது.