வங்காளதேசத்தை மூழ்கடித்த முல்டர்: தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ், 219 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றது.
செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 219 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
494 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர்
தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது.
வங்காளதேசம் முதல் இன்னிங்ஸில் 91 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, தென் ஆப்பிரிக்கா 494 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
மார்கியூஸ் அக்கர்மன் 150 ஓட்டங்களும், வியான் முல்டர் 100 ஓட்டங்களும் விளாசினர். ஷோரிபுல் இஸ்லாம், காலித் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

வியான் முல்டர் ஆட்டநாயகன்
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்காளதேச அணி 184 ஓட்டங்களுக்கு சுருண்டது. டௌஹித் ஹிரிடோய் 41 (33) ஓட்டங்களும், மஹ்ஃபிஜுல் இஸ்லாம் 38 ஓட்டங்களும் எடுத்தனர்.

மிரட்டலாக பந்துவீசிய வியான் முல்டர் (Wiaan Mulder) 7 விக்கெட்டுகளும், மார்கோ ஜென்சென் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இன்னிங்ஸ் மற்றும் 219 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
சதம் மற்றும் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய வியான் முல்டர் ஆட்டநாயகன் விருதும், இரண்டு சதங்களுடன் 307 ஓட்டங்கள் குவித்த மார்கியூஸ் அக்கர்மன் (Marques Ackerman) தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
